2 மகன்களுடன் கிணற்றில் பெண் பிணமாக மிதந்த மர்மம் போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை அருகே 2 மகன்களுடன் இளம்பெண் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 மகன்களுடன் கிணற்றில் பெண் பிணமாக மிதந்த மர்மம் போலீசார் விசாரணை
Published on

சிப்காட், (ராணிப்பேட்டை),


குடும்பம்

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள லாலாபேட்டையை அடுத்த சத்திரம்புதூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 32). இவர் திருவலம் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் பெங்களூருவில் வசித்த இவரது தாய்மாமன் மகள் ரேகாவுக்கும் (26) கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோனேஷ் (3), சுஜித் (2) என்ற மகன்கள். இவர்களில் மூனேஷ் அங்குள்ள அங்கன்வாடியில் படித்து வந்தான்.

வீடு திரும்பவில்லை

இந்த நிலையில் ரேகா, கடந்த 9-ந் தேதி 2 குழந்தைகளுடன் விறகு பொறுக்க செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் 3 பேரும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பாபுவின் சித்தி தேன்மொழி அவரது மகளுடன் சத்திரம்புதூர் பகுதியில் உள்ள வயலுக்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் ரேகா மற்றும் அவரது 2 மகன்கள் உடல்கள் மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் தகவல் அறிந்த சத்திரம்புதூர் பகுதி கிராம மக்கள் அங்கு திரண்டனர். சம்பவ இடத்துக்கு ராணிப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் முக்தீஸ்வரன் மற்றும் போலீசார் சென்று கிணற்றில் பிணமாக மிதந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரேகா தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றுக்குள் தவறி விழுந்து 3 பேரும் இறந்தார்களா? அல்லது இவர்களது சாவுக்கு வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து ரேகாவின் கணவர் பாபு மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும், 2 குழந்தைகளும் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com