ஆழ்குழாய் கிணறு மூலம் தஞ்சை மாவட்டத்தில் 28,175 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி

ஆழ்குழாய் கிணறு மூலம் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 28,175 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. மேட்டூர் அணை திறக்கப்படாததால் விளை நிலங்களில் ஆடு, மாடுகள் மேயும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஆழ்குழாய் கிணறு மூலம் தஞ்சை மாவட்டத்தில் 28,175 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி
Published on

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி வழக்கமாக நடைபெறும். இதற்காக மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும். இந்த தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி அதிக ஏக்கரில் நடைபெறும். ஆனால் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் ஜூன் மாதம் 12-ந்தேதி அணை திறக்கப்படவில்லை. இதனால் ஆற்றுப்பாசனம் மூலம் குறுவை நெல் சாகுபடி நடைபெறவில்லை. கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சை பசேல் என காணப்படக்கூடிய இந்த நேரத்தில் நிலங்கள் எல்லாம் தரிசாக காட்சி அளிக்கிறது. குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணை திறக்கப்படாததால் விளை நிலங்களில் வளர்ந்துள்ள புற்களை ஆடு, மாடுகள் மேயும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதை பார்க்கும் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் ஆழ்குழாய் கிணறு மூலமே குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சூரக்கோட்டை பகுதியில் நிலத்தை டிராக்டர் மூலம் உழும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் நாற்றங்கால் விடப்பட்டு, நடவு பணிகளும் முடிவடைந்துவிட்டன.

அதிகாரிகள் கருத்து

இது குறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டில் குறுவை பருவத்தில் 87 ஆயிரத்து 500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆழ்குழாய் கிணறு மூலம் இதுவரை 28 ஆயிரத்து 175 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுகிய கால நெல் ரகமான கோ-51, ஆடுதுறை-43, 45 ஆகியவை 355 டன்னும், பயறு வகை விதையான ஆடுதுறை-5 ரகம் 41 டன்னும் தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பயறு வகை பயிர்களில் 22 ஆயிரத்து 313 ஏக்கரில் உளுந்தும், 2 ஆயிரத்து 805 ஏக்கரில் எள்ளும், 1,242 ஏக்கரில் நிலக்கடலையும் பயிரிடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் உரத் தேவைக்காக யூரியா 10 ஆயிரத்து 50 டன்னும், டி.ஏ.பி. 5 ஆயிரத்து 278 டன்னும், பொட்டாஷ் 1,200 டன்னும், காம்ப்ளக்ஸ் 4 ஆயிரத்து 501 டன்னும் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

விவசாயிகள் கூறும்போது, கடந்த 6 ஆண்டுகளாக குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நடைபெறவில்லை. இதனால் நாங்கள் பிழைப்பிற்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். சிலர் பிழைப்பு தேடி வெளிமாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி கர்நாடகஅரசிடம் இருந்து காவிரி தண்ணீரை பெற தமிழகஅரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டுமே நமது உரிமை பாதுகாக்கப்படும். இதை அமைக்க மத்தியஅரசு முன்வர வேண்டும். மத்தியஅரசுக்கு மாநிலஅரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயம் அழிந்து டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com