ஆலங்குடி அருகே வெவ்வேறு விபத்தில் 3 வாலிபர்கள் சாவு

ஆலங்குடி அருகே வெவ்வேறு விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
ஆலங்குடி அருகே வெவ்வேறு விபத்தில் 3 வாலிபர்கள் சாவு
Published on

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடக்கு பொன்னன் விடுதியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் மணிகண்டன் (வயது 26). இவர் நேற்று முன்தினம் சம்பட்டி விடுதி நான்கு ரோட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஆலங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, மாங்கோட்டை அம்பேத்கர் நகர் நல்லகண்ணு மகன் பிரகாஷ்ராஜ் (23), அதே பகுதியை சேர்ந்த சித்திரவேலு மகன் பிரசாத் ஆகிய 2 பேரும், மோட்டார் சைக்கிளில் மாங்கோட்டையிலிருந்து சம்பட்டி விடுதி நான்கு ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். மாங்கோட்டை விலக்கு சாலை அருகே வந்த போது, 2 மோட்டார் சைக்கிளும் எதிர் பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

2 பேர் சாவு

இதில் 3 பேரும் படுகாய மடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன், பிரகாஷ்ராஜ் ஆகிய 2 பேரும் இறந்து விட்டதாக கூறினர். படுகாயமடைந்த பிரசாத் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி சாவு

அன்னவாசல் அருகே உள்ள அம்மாசத்திரம் பகுதியை சேர்ந்தவர் சின்னையா மகன் அழகர்சாமி (வயது 20). தொழிலாளி. இவர், தனது மோட்டார் சைக்கிளில் சித்தன்னவாசலுக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சித்துப்பட்டி அருகே வந்தபோது, அழகர்சாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அழகர்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com