

ராய்காட்,
ராய்காட் மாவட்டத்தில் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தண்ணீரில் மூழ்கிய படகு
ராய்காட் மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள் பானா சாகர் என்ற படகில் கடந்த 17-ந்தேதி மீன்பிடிக்க கடலுக்குள் சென்றிருந்தனர். மாலை 4 மணி அளவில் திகி அட்காவ் கடற்கரையில் இருந்து 9 மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென படகில் தண்ணீர் புகுந்தது. இதனால் செய்வதறியாமல் திகைத்த மீனவர்கள் தண்ணீரை வெளியேற்ற போராடினர்.
7 மீனவர்கள் மீட்பு
இதில் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் போனதால் கொஞ்சம் கொஞ்சமாக படகு கடலில் மூழ்கியது. அப்போது, அந்த வழியாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த 2 விசைப்படகுகள் விரைந்து வந்தது. இதில் இருந்தவர்கள் கடலில் மூழ்கிய படகில் சிக்கி தவித்த 7 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மீட்கப்பட்ட மீனவர்களை கரைக்கு பத்திரமாக அழைத்து வந்தனர்.