பூக்களின் 7 பருவங்கள்

பூக்களின் 7 பருவங்கள்
Published on

செடி, கொடிகளில் பூக்கும் பூவை பொதுவாக அனைவரும் 'பூ' என்ற பெயரிலேயே அழைப்பார்கள். ஆனால் ஒரு செடியில் தோன்றுவது முதல் உதிர்ந்து விழுவது வரையில் பூக்கள், 7 பருவங்களை எட்டுவதாகவும், ஒவ்வொரு பருவத்திலும் பூவுக்கு வேறுவேறு பெயர்கள் இருப்பதாகவும் தமிழ் நூல்கள் சொல்கின்றன.

* அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் ஆகியவை பூக்களின் 7 பருவங்களாகும்.

* ஒரு செடி பூக்கும் பருவத்தில் முதலில் தோன்றுவது அரும்பு. இது பார்க்க மிகவும் சிறியதாக இருக்கும்.

* அரும்பு சற்று பெரியதாக வளர்ந்த நிலையை அடையும்போது, அது 'மொட்டு' என்று அழைக்கப்படுகிறது. இந்த பருவத்தில்தான் பூவுக்கு நறுமணம் உருவாகும்.

* மொட்டு சிறிதாக விரியும் நிலையில் இருப்பதை 'முகை' என்பார்கள்.

* மொட்டுகள் முழுமையாக விரியும் நிலையை 'மலர்' என்கிறோம். பேச்சு வழக்கில் அனைவரும் பூ என்று இதனை சொல்கிறார்கள்.

* பூவின் இதழ்கள் நன்றாக விரிந்த நிலையில் இருப்பதை 'அலர்' என்பர். இந்த நிலையில்தான் பூவில் இருந்து மகரந்தம் பரவுகிறது.

* மிகவும் மலர்ந்த பூக்கள் ஓரிரு நாட்கள் கழித்து வாடும் நிலையை 'வீ' என்கிறோம். இதற்கு 'வீழ்தல்' என்று பொருள்.

* பூ வாடி வதங்கி உதிரும் நிலையை எட்டுவது 'செம்மல்' எனப்படும். இந்த நிலை வந்ததும் செடியில் பூ தங்குவது கிடையாது.

மலர் பருவத்திற்கு முன்பாக உள்ள மூன்றும் பூவின் இளமைப் பருவங்கள், மலருக்கு பின்னால் உள்ள மூன்றும் பூவின் முதுமை பருவங்கள் ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com