தொழிலாளியை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை ஓசூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


தொழிலாளியை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை ஓசூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 12 Nov 2018 10:15 PM GMT (Updated: 12 Nov 2018 6:57 PM GMT)

கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஓசூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்டது சம்மந்தக்கோட்டை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் லட்சுமய்யா (வயது 35). தொழிலாளி. இதே ஊரைச் சேர்ந்தவர்கள் ஆஞ்சி என்கிற ஆஞ்சப்பா (25), ஹரீஷ் என்கிற வீரப்பா (24), சசிக்குமார் (23).

லட்சுமய்யாவின் மனைவி ஜோதியம்மாளுக்கும், ஆஞ்சி என்கிற ஆஞ்சப்பாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லட்சுமய்யா, ஆஞ்சப்பாவிடம் சென்று தனது மனைவியுடன் உள்ள கள்ளத்தொடர்பு குறித்து கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஆஞ்சப்பா மற்றும் அவருடைய நண்பர்கள் ஹரீஷ், சசிக்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து லட்சுமய்யாவை தடியாலும், கல்லாலும் தாக்கி கொலை செய்தனர். பின்னர் உடலை அந்த பகுதியில் உள்ள கிணற்றில் வீசி சென்றார்கள். இந்த கொலை கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.

இக்கொலை தொடர்பாக இருதுகோட்டை கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆஞ்சப்பா, ஹரீஷ், சசிக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.


இந்த கொலை வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அசோகன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஆஞ்சப்பா, ஹரீஷ், சசிக்குமார் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேலாயுதம் ஆஜர் ஆகி வாதாடினார்.

Next Story