மாவட்ட செய்திகள்

கோவையில் இருந்து ஈரோடு சென்ற பஸ்சில் ‘போதை’ டிரைவரால் பயணிகள் பீதி: கூச்சல்போட்டு நிறுத்தியதால் தப்பினர் + "||" + Passengers panicked by the 'narcotics' driver in Erode bus passenger from Coimbatore: They stopped by the shouting

கோவையில் இருந்து ஈரோடு சென்ற பஸ்சில் ‘போதை’ டிரைவரால் பயணிகள் பீதி: கூச்சல்போட்டு நிறுத்தியதால் தப்பினர்

கோவையில் இருந்து ஈரோடு சென்ற பஸ்சில் ‘போதை’ டிரைவரால் பயணிகள் பீதி: கூச்சல்போட்டு நிறுத்தியதால் தப்பினர்
கோவையில் இருந்து ஈரோடு சென்ற பஸ்சில் போதை டிரைவரால் பயணிகள் பீதிஅடைந்தனர்.
கோவை, 

கோவை மத்திய பஸ்நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.45 மணியளவில் ஈரோட்டுக்கு தனியாருக்கு சொந்தமான பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை சதீஸ்குமார் (வயது 40) என்பவர் ஓட்டினார். இந்த பஸ், மத்திய பஸ்நிலையத்தில் இருந்து கிளம்பியது முதலே டிரைவர் தள்ளாடியபடியே இருந்தார்.

பல இடங்களில் எதிரே சென்ற வாகனங்கள், முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதுவது போல் பஸ்சை ஓட்டினார். இதனால் பயணிகள் பீதியடைந்து கூச்சல் போட்டனர். இதனை பார்த்த கண்டக்டர், டிரைவரிடம் சென்று பஸ்சை நிறுத்துமாறு கூறினார். அப்போது அவர் குடிபோதையில் பஸ்சை இயக்கியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த பஸ் அவினாசி ரோடு அண்ணா சிலை சிக்னல் அருகே ஓரம் கட்டப்பட்டது. அத்துடன் அந்த டிரைவரால் பஸ்சை விட்டு இறங்க முடியவில்லை. இதனால் அவர் பஸ் உள்ளேயே இருக்கையில் அமர்ந்தபடி தலையை தொங்கவிட்டவாறு போதையில் தூங்கினார். பின்னர் பயணிகள் பஸ்சை விட்டு கீழே இறங்கி வேறு பஸ்களில் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு டிரைவர் சதீஸ்குமாருக்கு மது அருந்தியிருப்பதை கண்டுபிடிக்கும் கருவி மூலம் சோதனை செய்தனர். அதில் அவர் மது அருந்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் டிரைவர் சதீஸ்குமாரை போலீஸ்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

இதுகுறித்து அந்த பஸ்சில் பயணம் செய்தவர்கள் கூறியதாவது:-

கோவை மத்திய பஸ்நிலையத்தில் இருந்து பஸ் வெளியே வந்தபோதே அதிகளவு சத்தத்துடன் தான் கிளம்பியது. அப்போது நாங்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் போகப்போக டிரைவர் தள்ளாடியபடி பஸ்சை ஓட்ட ஆரம்பித்தார். இதனால் அவர் மதுபோதையில் பஸ்சை இயக்குகிறாரா? என்று சந்தேகம் அடைந்தோம். பின்னர் அவர் அருகே சென்று பார்த்த போது அவரது கண்கள் சிவப்பு நிறத்தில் இருந்தது. இதனால் அவர் மது போதையில் தான் பஸ்சை இயக்குகிறார் என்று உறுதி செய்தோம். இதையடுத்து அந்த டிரைவரிடம் பஸ்சை ஓரம்கட்ட கூறினோம். ஆனால் அவர் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த நாங்கள் பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டோம். இதனை தொடர்ந்து அந்த பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதுபோன்று குடிபோதையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, குடிபோதையில் பஸ்சை இயக்குவது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு பஸ்சை இயக்கிய டிரைவர் சதீஸ்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோவையில் சில தனியார் பஸ் டிரைவர்கள் பஸ்சை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்துகின்றனர். பயணிகளின் உயிரை கவனத்தில் கொண்டு டிரைவர்கள் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்றனர்.