திருவொற்றியூரில் யூ டியூப்பை பார்த்து கேரட் பீர் தயாரித்து விற்றவர் கைது


திருவொற்றியூரில் யூ டியூப்பை பார்த்து கேரட் பீர் தயாரித்து விற்றவர் கைது
x
தினத்தந்தி 24 April 2020 10:45 PM GMT (Updated: 24 April 2020 10:30 PM GMT)

திருவொற்றியூரில் யூ டியூப்பை பார்த்து கேரட் பீர் தயாரித்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர், 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் மதுபிரியர்கள், போதைக்காக கள்ளச்சாரயம் காய்ச்சுவது மற்றும் பல்வேறு போதை பொருட்கள் தயாரித்து பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக வடசென்னை பகுதியில் கேரட் பீர் என்ற புதுவகை போதை பானம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியில் கேரட் பீர் தயாரிப்பதாக வந்த தகவலையடுத்து வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் திருவொற்றியூர் போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்யராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அதில் அதே பகுதியைச் சேர்ந்த சுகுமார் (வயது 25) என்பவர் கேரட் பீர் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த 2 லிட்டர் கேரட் பீரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் அவர், செல்போனில் யூ டியூப்பை பார்த்து கேரட் ஜூஸ் தயாரித்து, அதில் ஈஸ்ட் என்ற ரசாயன பவுடரை சேர்த்து 2 நாள் ஊறவைத்து பின்னர் அதை எடுத்து குடித்தால் போதை வரும் என்று போடப்பட்டு இருந்தது. அதை பார்த்து கேரட் பீர் தயாரித்து விற்பனை செய்ததாக கூறினார். மேலும் வேறு ஏதேனும் போதை வஸ்துகள் தயாரிக்கப்படுகிறதா? எனவும் தனிப்படை போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story