கன்னியாகுமரி வாவத்துறை மீன் மார்க்கெட் விவகாரம்: 2 கிராம மக்களிடையே அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை


கன்னியாகுமரி வாவத்துறை மீன் மார்க்கெட் விவகாரம்: 2 கிராம மக்களிடையே அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 17 Jun 2020 9:30 PM GMT (Updated: 17 Jun 2020 5:35 PM GMT)

கன்னியாகுமரி வாவத்துறை மீன் மார்க்கெட் விவகாரம் தொடர்பாக 2 கிராம மக்களிடையே அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி வாவதுறை மீன் மார்க்கெட்டில் மீன் விற்பது சம்பந்தமாக வாவத்துறை மீனவர்களுக்கும், வெளிப்பகுதி மீனவர்களுக்கும் இடையே இருந்து வந்த பிரச்சினை சம்பந்தமாக வாவத்துறை மீனவர்கள் கடந்த 17 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர். இது சம்பந்தமாக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் இதுவரை சமரச உடன்பாடு ஏற்படாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் இறுதிகட்ட சமரச பேச்சுவார்த்தை நேற்று மதியம் நடந்தது. இரு கிராம மக்களுக்கிடையேயான இந்த அமைதி பேச்சுவார்த்தை கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் தலைமை தாங்கினர். மேலும், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராகீம் மற்றும் கன்னியாகுமரி ஊர் சார்பில் ஊர் தலைவர் நாஞ்சில் மைக்கேல் தலைமையில் 4 பேரும், வாவத்துறை ஊர் சார்பில் பங்கு பேரவை துணைத் தலைவர் அந்தோணி ஜெபஸ்தியான் தலைமையில் 6 பேரும் கலந்து கொண்டனர்.

நிரந்தரமாக தடை

இந்த கூட்டத்தில், வாவத்துறை மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்று (புதன்கிழமை) முதல் மீன்பிடிக்கச் செல்ல ஒத்துக்கொண்டனர். அதே சமயம் கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளில் பிடித்து வரும் மீன்களை வாவத்துறை கடற்கரையில் தெற்கு பக்கமாக உள்ள பகுதியில் வைத்து வாவத்துறை மீனவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படாதவாறு வலைகளை பிரித்து மீன்களை தரம் பிரித்து மீன் விற்பனை கூடத்திற்கு கொண்டு வர வேண்டும், இரு கிராமத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள், வருவாய்த்துறை மற்றும் மீன்வளத்துறை, காவல்துறை சார்பில் குழு அமைத்து பிரச்சினை ஏற்படாதவாறு பார்க்க வேண்டும், இரு கிராம மக்களும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இந்த குழுவினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும், இதை மீறி இரு கிராமங்களுக்கு இடையே ஏதேனும் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் நிரந்தரமாக இரு கிராம மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. 

Next Story