நெல்லை, பாபநாசத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
தை அமாவாசையையொட்டி நெல்லை, பாபநாசத்தில் மக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
நெல்லை:
தை அமாவாசையை முன்னிட்டு நெல்லை, பாபநாசத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினார்கள்.
நெல்லையில் தர்ப்பணம்
தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலை பகுதிகளில் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள். இதன் மூலம் முன்னோர்களிடம் இருந்து ஆசீர்வாதங்களை பெறலாம் என்பது ஐதீகம். கடந்த ஆடி அமாவாசையின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீர்நிலைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், தர்ப்பணம் கொடுக்க அனுமதி வழங்கப்படவில்லை.
தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில், தை அமாவாசை தினத்தன்று நீர்நிலை பகுதிகளில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நெல்லை மாநகர் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
ஆற்றங்கரையில் குவிந்த மக்கள்
அதன்படி நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறை, சிந்துபூந்துறை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்று படித்துறை, ஜடாயு தீர்த்தம் ஆகிய இடங்களில் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். பலரும் அர்ச்சகர்களுக்கு காய்கறிகளை தானமாக வழங்கினர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக, நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர். இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அங்கு போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி அனுப்பி சரி செய்தனர்.
பாபநாசம்
பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு உள்ள படித்துறையில் அதிகாலை முதலே பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பதற்கு குவிந்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பாபநாசம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார், போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் நான்கு சக்கர வாகனங்கள் விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியில் நிறுத்தப்பட்டது. இருசக்கர வாகனங்கள் பழைய கோவில் ரோட்டில் நிறுத்தி பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் பாபநாசம் படித்துறையில் வைத்து தாமிரபரணி ஆற்றில் எள், தண்ணீர் இறைத்து தங்களது முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து ஆற்றில் நீராடி கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அம்பை
தை அமாவாசையை முன்னிட்டு, அம்பை தாமிரபரணி ஆற்றில் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அம்பை காசிநாத சுவாமி கோவில் படித்துறை, ஆஞ்சநேயர் கோவில் படித்துறை, ரெயில்வே பாலம் அருகில் தாமிரபரணி ஆற்றங்கரை, சின்ன சங்கரன்கோவில் ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் இருந்தே திரளானவர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
Related Tags :
Next Story