சென்னை ரெயில் நிலையத்தில் இளம்பெண் கற்பழித்து கொலையா? எலும்பு கூடு மீட்பு


சென்னை ரெயில் நிலையத்தில் இளம்பெண் கற்பழித்து கொலையா? எலும்பு கூடு மீட்பு
x
தினத்தந்தி 12 April 2021 7:42 AM IST (Updated: 12 April 2021 7:42 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. எலும்பு கூடு ஒன்றை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கஞ்சா கும்பல்

சென்னை கோட்டூர்புரம் போலீசார் நேற்று கஞ்சா கும்பலைச் சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்தார்கள். கஞ்சா போதையில் இருந்த அவர்கள் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டனர். 3 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர், சென்னை கிரீன்வேய்ஸ் சாலை ரெயில் நிலையத்தில், இரவு நேரத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாகவும், அந்த பெண்ணின் உடலை, அந்த ரெயில் நிலையத்தில் உள்ள குடோன் ஒன்றுக்குள் வீசி விட்டு, குற்றவாளிகள் தப்பி ஓடி விட்டதாகவும், இதை நாங்கள் நேரில் பார்த்தோம் என்றும் அந்த கஞ்சா கும்பலை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

குடிகாரன் போதையில் உளறினாலும், உண்மையைத்தான் உளறுவான் என்பது போல, அவர்கள் சொன்ன தகவலில் உண்மை இருப்பது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோட்டூர்புரம் போலீசார், கிரீன்வேய்ஸ் சாலை ரெயில் நிலைய குடோனில் சோதனை போட்டனர்.

எலும்பு கூடு

அந்த குடோனுக்குள் எலும்பு கூடு ஒன்று இருந்தது. மேலும் அந்த எலும்பு கூடு ஒரு பெண்ணின் உடலுக்கானது போல சில தடயங்கள் போலீசாருக்கு கிடைத்தது. அதை கைப்பற்றிய போலீசார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கஞ்சா கும்பலை கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்தனர். அதில் கற்பழிப்பு கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவரின் தகவல் கிடைத்தது. அந்த நபரை போலீசார் தேடினார்கள். அந்த நபர் கடந்த 3 மாதங்களாக தலைமறைவாகி விட்டதும் தெரிய வந்தது.

இது போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சாம்சன் ஆகியோர் மேற்பார்வையில் கோட்டூர்புரம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்தகட்ட விசாரணையில் இந்த வழக்கில் திடுக்கிடும் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.


Next Story