மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும்
மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.
விருதுநகர்,
விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகார பகிர்வுளித்தல்துறை மந்திரி தாவர்சந்த்கெலாட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனவே பாதிப்பு அடைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது. இவர்களால் உதவியில்லாமல் மருத்துவர்களை அணுக முடியாத நிலையில் பெரும்பாலானோர் உள்ளனர்.
எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியமாகும். குறைந்தபட்சம் தற்போதைய நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போட வேண்டியது அவசியமாகும்.
மேலும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை பற்றி கண்டறிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரப் பகிர்வு த்துறையின் சார்பில் ஒரு குழு அமைத்து அவர்களது எண்ணிக்கை பற்றி கணக்கெடுக்க வேண்டும். மேலும் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று விதிமுறை பாராமல் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தடுப்பூசி போடும் மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை அளித்து சிறப்பு கவுண்டர்கள் அமைத்து தாமதமில்லாமல் அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே கொரோனா தொற்றில் இருந்து மாற்றுத்திறனாளிகளை உரிய முறையில் காப்பாற்ற தாங்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளித்து அவர்களது வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடுவதற்கு உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story