பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த தாயின் உடல் அருகே 3 நாட்களாக தவித்த 1½ வயது குழந்தை
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தாய் உடல் அருகே 3 நாட்களாக பட்டினியால் தவித்த 1½ வயது குழந்தையை போலீசார் மீட்டனர்.
புனே,
புனே போசரி குடிசை பகுதியில் கடந்த சில நாட்களாக பூட்டி கிடந்த ஒரு வீட்டில் பயங்கர தூர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் திகி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு 29 வயதுயுடைய பெண் ஒருவர் பிணமாக அழுகிய நிலையில் கிடந்தார். அதன் அருகே உயிருக்கு ஆபத்தான நிலையில் 1½ வயது ஆண் குழந்தை மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக போலீசார் டாக்டரை வரவழைத்து பரிசோதனை நடத்தினர். இதில் குழந்தை கடந்த 3 நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்ததால் உடல் பலவீனம் அடைந்து குற்றுயிரும், குலையுயிருமாக கிடந்தது தெரியவந்தது.
இதனால் போலீசார் அந்த குழந்தைக்கு தண்ணீர், பால், பிஸ்கட் கொடுத்தனர். பின்னர் அக்குழந்தையை குழந்தைகள் நல கமிட்டியிடம் ஒப்படைத்தனர். குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் தாய் 3 நாட்களுக்கு முன் உயிரிழந்து இருக்கலாம் என்று தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரிவில்லை.
சில நாட்களுக்கு முன்பு அப்பெண்ணின் கணவர் உத்தரபிரதேசத்திற்கு சென்றிருந்தது தெரியவந்தது. உடனே அவரின் கணவருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story