அம்மாபேட்டை பகுதியில் வேகமாக பரவி வரும் கொேரானா தொற்று; சமூக இடைவெளி- முககவசத்தை மறந்த மக்கள்


அம்மாபேட்டை பகுதியில் வேகமாக பரவி வரும் கொேரானா தொற்று; சமூக இடைவெளி- முககவசத்தை மறந்த மக்கள்
x
தினத்தந்தி 3 May 2021 9:45 PM GMT (Updated: 3 May 2021 9:45 PM GMT)

அம்மாபேட்டை பகுதியில் சமூக இடைவெளி-முககவசத்தை மக்கள் கடைப்பிடிக்க மறந்ததால் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது.

அம்மாபேட்டை
அம்மாபேட்டை பகுதியில் சமூக இடைவெளி-முககவசத்தை மக்கள் கடைப்பிடிக்க மறந்ததால் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. 
அம்மாபேட்டை பகுதியில்...
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்திலும் அம்மாபேட்டை வட்டாரத்தில் உள்ள அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டைகேட் மற்றும் கேசரிமங்கலம், குருவரெட்டியூர், புரவிபாளையம் ஆகிய பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று வரை 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எஞ்சியவர்கள் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டு உள்ளார்கள். 
100-க்கும் மேற்பட்டோர்
இந்தநிலையில் கடந்த 2 நாட்களில் அம்மாபேட்டையில் 7 வயது சிறுவன், 18 வயது வாலிபர், 37, 38 வயதுடைய பெண்கள் உள்பட 5 பேருக்கும், நெரிஞ்சிப்பேட்டையில் 2 பேர், சிங்கம்பேட்டை கேட் காலனிப்பகுதியில் 15 வயது மாணவி, 40, 55 ,60 வயதுடைய பெண்கள் உட்பட 7 பேர் என தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இதுகுறித்து அம்மாபேட்டை வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி கூறும்போது, 'அம்மாபேட்டை, வட்டாரத்தில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புடைய 100-க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டு வீட்டு தனிமையிலும், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசிகள்
நோய்த்தொற்றுடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் குடியிருக்கும் வீடுகள், சுற்றுவட்டார பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும் நோய்த்தொற்று கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அம்மாபேட்டை வட்டார அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு
முகக்கவசம் அணிய வேண்டும். சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும். சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு  தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனாலும் பொதுமக்கள் நோய்த்தொற்று குறித்து அரசு கூறும் விழிப்புணர்வை பொருட்படுத்தாமல், முககவசம் அணியாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். இதனால் நோய்த்தொற்று இப்பகுதியில் அதிகரித்து வருகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் கொரோனாவை வெல்ல முடியும்' என்றார்.

Next Story