கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரிக்க மஞ்சள் நிற பிளாஸ்டிக் பை; மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது


கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரிக்க மஞ்சள் நிற பிளாஸ்டிக் பை; மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 3 May 2021 9:48 PM GMT (Updated: 3 May 2021 9:48 PM GMT)

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரிக்க மாநகராட்சி சார்பில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் பை வழங்கப்பட உள்ளது.

ஈரோடு
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரிக்க மாநகராட்சி சார்பில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் பை வழங்கப்பட உள்ளது.
தடுப்பு நடவடிக்கை
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் மாவட்டத்தில் ஏற்படும் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், 3-ல் ஒரு பகுதியினர் மாநகர பகுதிகளை சார்ந்தவர்களாக உள்ளனர்.
இதனால் ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் நேற்று கிருமிநாசினி  தெளிக்கப்பட்டது.
கிருமிநாசினி தெளிப்பு
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா என்.எம்.எஸ்.காம்பவுன்ட், ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ்.வீதி, கனிமார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் வீதிகளிலும், கடைகளின் முன்பாகவும் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்தனர்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மாநகராட்சி அலுவலகத்திற்குள் பொதுமக்கள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி மாநகராட்சி அலுவலகத்துக்குள் செல்லும் பொது மக்களுக்கு முதலில் உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் உள்ளே சென்றவர் வெளியே வந்த பின்னரே வேறு ஒருவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
குப்பை வாங்க தனி பை
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து சேகரமாகும் குப்பைகளை மற்ற குப்பைகளுடன் சேர்த்து கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி மாநகராட்சி சார்பில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் பை வழங்கப்படும் என்றும், கொரோனா நோயாளிகள் குப்பைகளை மஞ்சள் பையில் போட்டுக்கொடுத்தால், அதை மாநகராட்சி நிர்வாகம் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story