அந்தியூர், அம்மாபேட்ைட பகுதியில் தொழில் அதிபர் உள்பட 5 பேர் கொரோனாவால் சாவு- பல்வேறு பகுதிகளில் 52 பேருக்கு நோய் தொற்று


அந்தியூர், அம்மாபேட்ைட பகுதியில் தொழில் அதிபர் உள்பட 5 பேர் கொரோனாவால் சாவு- பல்வேறு பகுதிகளில் 52 பேருக்கு நோய் தொற்று
x
தினத்தந்தி 4 May 2021 10:26 PM GMT (Updated: 4 May 2021 10:26 PM GMT)

அந்தியூர், அம்மாபேட்டை பகுதியில் தொழில் அதிபர் உள்பட 5 பேர் கொரோனாவால் இறந்தார்கள். மேலும் பல்வேறு பகுதிகளில் 52 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

ஈரோடு
அந்தியூர், அம்மாபேட்டை பகுதியில் தொழில் அதிபர் உள்பட 5 பேர்  கொரோனாவால் இறந்தார்கள். மேலும் பல்வேறு பகுதிகளில் 52 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 
தொழில் அதிபர் 
அந்தியூர் அடுத்த ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளை அதிபர் ஒருவருக்கு கடந்த 21-ந் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கு தொற்று உறுதியானது. 
இதைத்தொடர்ந்து அவர் கோவையில் உள்ள ஒருதனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலை சிகிச்ைச பலனின்றி அவர் இறந்தார். 
வங்கி ஊழியர்
மேலும் ஆப்பக்கூடல் கனரா வங்கியில் பணியாற்றிய 52 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் வங்கிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஆப்பக்கூடல் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தார்கள்.
போக்குவரத்து கழக பணியாளர்
அந்தியூர் தவுட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஆண் ஒருவர் அந்தியூர் போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றி வந்தார். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் இறந்தார். 
அந்தியூர் அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
10 பேருக்கு...
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள பெஜிலட்டி கிராமத்தில் 9 வயதுடைய சிறுவன், 45 வயது உடைய பெண், 37 வயது உடைய 2 பெண்கள், 13 வயது உடைய பெண், 70 வயது உடைய ஆண், 20 வயதுடைய ஆண், 17 வயது உடைய ஆண், 14 வயது உடைய ஆண், 28 வயது உடைய பெண் என 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
ஊஞ்சலூர்
ஊஞ்சலூரை அடுத்துள்ள வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியூரில் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருக்கும், கிளாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையத்தில் 57 வயது உடைய ஆண் ஒருவருக்கும், பாசூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வேங்கியம்பாளையத்தில் 25 வயதுடைய பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்கள். மேலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. 
அம்மாபேட்டை 
அம்மாபேட்டை வட்டாரத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளிலும், முகாம் மற்றும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்தநிலையில் அம்மாபேட்டையை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்ைச பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
22 பேருக்கு
அதேபோல் குருவரெட்டியூர் அருகே உள்ள பி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் இறந்தார்.
மேலும் அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அப்பாச்சி நகர், பேங்க் வீதி, லட்சுமி நகர், சிங்கம்பேட்டை நெரிஞ்சிப்பேட்டை ஊமாரெட்டியூர், ஆகிய இடங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 22 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
விழிப்புணர்வு
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளித்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், அரசின் விதிமுறைகளை அலட்சியப்படுத்தாமல் கவனமுடன் இருக்குமாறு சுகாதாரத்துறையின் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 
சென்னிமலை
சென்னிமலை அருகே முகாசிபிடாரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பிடாரியூர் பகுதியில் வசிக்கும் சிலர் கடந்த வாரம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்தனர்.
அதில் ஒருவர் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு பின்னர் அவருக்கு கொரோனா தொற்றாக மாறியது. அதைத்தொடர்ந்து அதே பகுதியில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
வீடுகளில் தனிமை
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் மேலும் பலருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் லேசான கொரோனா அறிகுறியுடன் இருந்த சிலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தடுப்பு
இந்த நிலையில் பிடாரியூர் பகுதியில் மேலும் கொரானா தொற்று பரவாமல் இருக்க 130 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
அந்த பகுதிக்கு வெளியிலிருந்து யாரும் செல்லாத வகையிலும், அதே சமயம் அந்த வீடுகளில் இருந்து யாரும் வெளியே வராத வகையிலும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது.

Next Story