2 நாட்களுக்கு முன்பு மனைவி இறந்த நிலையில் கொரோனா தொற்றால் கட்டிட மேஸ்திரியும் சாவு


2 நாட்களுக்கு முன்பு மனைவி இறந்த நிலையில் கொரோனா தொற்றால் கட்டிட மேஸ்திரியும் சாவு
x
தினத்தந்தி 29 May 2021 1:11 AM GMT (Updated: 29 May 2021 1:11 AM GMT)

2 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் மனைவி இறந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கட்டிட மேஸ்திரியும் பரிதாபமாக இறந்தார்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 66). கட்டிட மேஸ்திரியான இவர், தமிழ்நாடு கட்டிட தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

இவருடைய மனைவி கல்யாணி (55). இவர்களுக்கு 3 மகன்களும் உள்ளனர். கல்யாணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்தார்.

கணவன், மனைவி சாவு

கடந்த புதன்கிழமை கல்யாணிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்தநிலையில் ஆறுமுகம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

ஆறுமுகம் நேற்று காலை 6 மணி அளவில் ஆஸ்பத்திரியில் திடீரென மயக்கமடைந்து இருக்கையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா தொற்றால் கணவன், மனைவி இருவரும் இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story