சென்னையில் பாலியல் புகாரில் சிக்கிய தடகள பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு


சென்னையில் பாலியல் புகாரில் சிக்கிய தடகள பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 29 May 2021 6:48 AM IST (Updated: 29 May 2021 6:48 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பாலியல் புகாரில் சிக்கிய தடகள பயிற்சியாளர் மீது போக்சோ சட்டப்பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவர் போலீஸ் காவலுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

சென்னை,

சென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்திரி பள்ளியில் வீசிய பாலியல் புகார் புயல் பெரிய அளவில் விஸ்வரூபமெடுத்துள்ளது. அடுத்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தும் இந்த புயலில் சிக்கி உள்ளார். 3-வதாக சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜனும் (வயது 59) இந்த பாலியல் புயலுக்கு தப்பவில்லை. அவர் மீது தடகள விளையாட்டு வீராங்கனை ஒருவர் அதிர்ச்சியூட்டும் புகாரை சென்னை பூக்கடை போலீசில் கொடுத்துள்ளார். அவரது புகார் மனு விவரம்:-

பாலியல் துன்புறுத்தல்

நான் 2013-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பயிற்சியாளர் நாகராஜனிடம் தடகள பயிற்சி பெற்றேன். சென்னை பிராட்வேயிலுள்ள பச்சையப்பன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அவர் தினமும் பயிற்சி கொடுப்பார். நானும் பயிற்சியில் கலந்து கொள்வேன். பயிற்சி முடிந்து மற்ற வீராங்கனைகளை அனுப்பி விட்டு என்னை மட்டும் இருக்க சொல்வார்.

மைதானம் அருகில் தனி அறையில் பிசியோதெரபி பயிற்சி கொடுப்பதாக சொல்லி பாலியல் ரீதியாக எனக்கு தொல்லை கொடுப்பார். படுக்க வைத்தும், உட்கார வைத்தும் உடலின் அனைத்து இடங்களிலும் கையை வைத்து அவர் செக்ஸ் சேட்டை செய்வார். நான் சில சமயங்களில் அந்த பயிற்சி வேண்டாம் என்று மறுத்துள்ளேன். ஆனால் அவர் விடமாட்டார். இந்த பயிற்சிக்கு ஒத்துழைத்தால் உன்னை சிறந்த வீராங்கனை ஆக்குவேன், இல்லையென்றால் பயிற்சியில் இருந்து உன்னை தூக்கி விடுவேன் என்று மிரட்டுவார். இதனால் அவரது பாலியல் துன்புறுத்தல்களை வேதனையோடு தாங்கிக்கொண்டேன்.

என்னைப்போல வேறு சில வீராங்கனைகளும் அவரது பாலியல் துன்புறுத்தல்களை மனவேதனையுடன் சந்தித்துள்ளனர். அவரது இம்சை தாங்காமல் பயிற்சியில் இருந்து விலகி, வேறு பயிற்சி மையத்துக்கு சென்றவர்களை வாழ விடாமல் தொல்லை கொடுத்துள்ளார். நானும் வேறு மையத்துக்கு பயிற்சிக்கு சென்ற போது, என்னைப்பற்றி தவறாக சொல்லி அந்த மையத்திலும் என்னை பயிற்சி பெற விடாமல் தடுத்து என் வாழ்க்கையை கெடுத்தார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, இதுபோல விளையாட்டு துறையில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து அப்பாவி வீராங்கனைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை முயற்சி

இந்தநிலையில் பயிற்சியாளர் நாகராஜன் நேற்று முன்தினம் நள்ளிரவு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்து மயங்கி விழுந்தார். அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அவர் மீது போக்சோ சட்டப்பிரிவு உள்ளிட்ட 7 சட்டப்பிரிவுகளின் கீழ் பூக்கடை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகராஜனுக்கு மருத்துவ சிகிச்சை முடிந்தவுடன் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

புகார் கொடுக்கலாம்

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் பெண்கள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியின் 9444772222 என்ற செல்போன் எண்ணில் பேசி புகார் கொடுக்கலாம் என்றும், புகார் கொடுப்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நாகராஜன் மத்திய அரசு பணியில் ஜி.எஸ்.டி.வரி கண்காணிப்பாளராக உள்ளார். அவர் ஓய்வு பெற இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், பாலியல் புயல் தாக்குதலில் சிக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story