தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்


தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

கள்ளக்குறிச்சி, 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்தி வருகிறது.
 அதன்படி  கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதனிடையே கொரோனா தொற்று தீவிரமடைந்ததால், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. இதில்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 21,065 பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 77,624 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒருவாரத்துக்கு முன்பு  45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இருப்பினும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
 இதனால் மருத்துவமனைகள் மற்றும் அரசுபள்ளி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்கு தடுப்பூசி போடவந்த 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

 நேற்று முன்தினம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வந்ததை தொடர்ந்து, தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது. 
 இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று வழக்கும்போல் கொரோனா தடுப்பூசி போடும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு வந்தனர். இந்த நிலையில் காலை 11 மணிக்கு தடுப்பூசி அனைத்தும் காலியாகி விட்டது.
 இதனால் தடுப்பூசி போட நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதை தவிர்க்க கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசியை அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால்  கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் நேற்றே நிறுத்தப்பட்டது. 

Next Story