மத்திய கைலாஷ்-சிறுசேரி இடையே 5 இடங்களில் மேம்பாலம்: அமைச்சர் எ.வ.வேலு
சென்னை மத்திய கைலாஷ்-சிறுசேரி இடையே ரூ.500 கோடி மதிப்பில் 5 இடங்களில் மேம்பாலம் கட்டப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
அமைச்சர் ஆய்வு
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் ரூ.108.13 கோடி மதிப்பில் இந்திராநகர் சாலை சந்திப்பு, டைடல் பார்க் சந்திப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகளான ‘யு' வடிவ மேம்பாலம், இ.சி.ஆர். சாலைப்பிரிவு நடை மேம்பாலம், பக்கிங்காம் கால்வாய் குறுக்கே கட்டப்படும் கூடுதல் பாலம் ஆகியவற்றை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.இதன்பின்பு, ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளையும், சோழிங்கநல்லூரில் மேடவாக்கம் சாலை, கலைஞர் கருணாநிதி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளையும் ஆய்வு செய்து அந்த பகுதிகளில் பொதுமக்கள் சந்திக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விரைந்து முடிக்க உத்தரவு
பெருங்களத்தூரில் ரூ.234 கோடியில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்த அமைச்சர், அந்த பணிகளை விரைவுபடுத்தி முடிக்க அறிவுறுத்தினார். சென்னை வெளிவட்ட சாலையில் ரூ.1,081 கோடியில் முடிக்கப்பட்ட சாலைப்பணிகளை ஆய்வு செய்து தடைப்பட்டுள்ள சிறு சிறு பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளையும் அதில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் ஆய்வு செய்தார்.
ரூ.500 கோடி மதிப்பில் மேம்பாலம்
இதன்பின்பு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை முக்கியமான 5 சாலைகளின் சந்திப்பில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு 2010-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து அதற்கான நிதியையும் தி.மு.க. அரசு ஒதுக்கீடு செய்தது.தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் கைவிட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மீண்டும் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை முக்கிய 5 சாலைகளின் சந்திப்பில் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்ட அலுவலர்களுடன் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுங்கச்சாவடி பணியாளர்களிடம் கருத்து
சென்னை மாநகர எல்லைக்குள் சுங்கச்சாவடி தேவையில்லை என்றும், அதை அகற்ற வேண்டும் என்றும் கடந்த காலங்களில் பொதுமக்கள் பெரிய போராட்டங்களை நடத்தினர். சுங்கச்சாவடிகளை அகற்றினால் அரசுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் வேலைவாய்ப்பு பாதிப்பு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். சுங்கச்சாவடிகளில் பணியாற்றும் பணியாளர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டது. இந்த விவகாரம் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை தலைமை என்ஜினீயர் சாந்தி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன பொது மேலாளர் ஞானசேகர், மெட்ரோ தலைமை என்ஜினீயர் சுமதி, கண்காணிப்பு என்ஜினீயர் இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story