இ-பாஸ் இல்லாமல் வருவோரை தடுக்க சோதனை சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை


இ-பாஸ் இல்லாமல் வருவோரை தடுக்க சோதனை சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை
x
தினத்தந்தி 22 Jun 2021 8:36 PM IST (Updated: 22 Jun 2021 8:36 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வருவோரை தடுக்க சோதனை சாடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

திண்டுக்கல்: 

இ-பாஸ் கட்டாயம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களில் மக்கள் பயணம் செய்வதற்கு இ-பதிவு தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. 

இதனால் மக்கள் வாடகை வாகனங்களில் வெளியிடங்களுக்கு செல்ல தொடங்கி விட்டனர்.


அதேநேரம் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, குற்றாலம், ஏலகிரி ஆகிய சுற்றுலா தலங்களுக்கு அவசர காரணங்களுக்காக மட்டும் மக்கள் இ-பாஸ் பெற்று செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இதனால் கொடைக்கானலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது.

தீவிர வாகன சோதனை 
அதன்படி இ-பாஸ் இல்லாமல் வருவோரை தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலை, கொடைக்கானல் சாலையில் காமக்காபட்டி, வெள்ளிநீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


இந்த போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை நடத்துகின்றனர். 

அதில் முறையாக இ-பாஸ் பெறப்பட்டு இருக்கிறதா? வாகனங்களில் மது உள்ளிட்ட போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்று சோதனையிடுகின்றனர்.


இதில் இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். அதோடு கொடைக்கானல் மலைப்பாதையில் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story