மடத்துக்குளம் பகுதியில் தென்னையில் ஊடுபயிராக கொய்யா சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்


மடத்துக்குளம் பகுதியில் தென்னையில் ஊடுபயிராக கொய்யா சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்
x

மடத்துக்குளம் பகுதியில் தென்னையில் ஊடுபயிராக கொய்யா சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் தென்னையில் ஊடுபயிராக கொய்யா சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆட்கள் பற்றாக்குறை
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது.மேலும் ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக இருப்பதால் புதிதாக தென்னை சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வாக சொட்டுநீர்ப் பாசனம் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான வழிகாட்டல்கள் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படுகிறது. இதனால் தற்போது மடத்துக்குளம் பகுதியில் சொட்டுநீர்ப் பாசனத்தில் தென்னையில் ஊடுபயிராக கொய்யா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தென்னை சாகுபடியின் போது மரங்களுக்கிடையே போதிய இடைவெளி அவசியமாகிறது. அந்த இடைவெளியில் அதிக அளவில் களைகள் முளைத்து தென்னைக்குக் கொடுக்கக்கூடிய உரம் மற்றும் தண்ணீரை பங்கிட்டுக் கொள்கிறது. இதனைத் தவிர்க்கவும், கூடுதல் வருவாய் பெறும் நோக்கத்திலும் ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்கிறோம்.
கவாத்து
பொதுவாக குறுகிய காலப்பயிர்களான காய்கறிகள், சோளம், கீரைகள் போன்றவற்றை தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்து வருகின்றனர். அதேநேரத்தில் பழப்பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கொய்யா சாகுபடி செய்துள்ளோம். தென்னை நடவு செய்யும்போதே கொய்யாவும் நடவு செய்வது சிறந்தது. அவ்வாறு செய்வதால் தென்னை வளர்வதற்குள் கொய்யாவில் அதிக மகசூல் ஈட்டி விட முடியும். ஒரு ஏக்கரில் 200-க்கும் மேற்பட்ட கொய்யா கன்றுகளை தென்னை மரங்களுக்கிடையில் ஊடுபயிராக நடவு செய்யலாம்.
கொய்யாவின் கிளைகள் உறுதிப்படும் வரை வரும் பூக்களைக் கிள்ளி விட வேண்டும். 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொய்யாவில் அறுவடை மேற்கொள்ளலாம். ஒரு ஏக்கரில் 200 கிலோவுக்கு மேல் பழங்கள் கிடைக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் கவாத்து செய்வதன் மூலமும் தேவையான நுண்ணூட்டங்களை அளிப்பதன் மூலமும் மகசூலை அதிகரிக்க முடியும். கொய்யாவில் சுமார் 5 முதல் 7 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக சிறந்த மகசூல் பெற முடியும். வைட்டமின் சி நிறைந்த கொய்யாப்பழத்துக்கு தற்போது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தென்னை மூலம் வருமானம் ஈட்டுவதற்கான கால இடைவெளியில் கொய்யா மூலம் கிடைக்கும் வருமானம் கைகொடுக்கும்.
இவ்வாறு அவர்கள்  கூறினார்.

Next Story