கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களை வைத்து பா.ஜனதா சிவசேனாவை குறி வைக்கிறது - சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு


கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களை வைத்து பா.ஜனதா சிவசேனாவை குறி வைக்கிறது - சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Aug 2021 4:22 AM IST (Updated: 4 Aug 2021 6:16 AM IST)
t-max-icont-min-icon

கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களை வைத்து பா.ஜனதா, சிவசேனாவை குறி வைக்கிறது என சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.

மும்பை,

பா.ஜனதா எம்.எல்.சி. பிரசாத் லாட் சமீபத்தில் தேவைப்பட்டால் மும்பையில் உள்ள சிவசேனாவின் தலைமையகமான சேனா பவனை தகர்ப்போம் என கூறினார். இவர் தேசியவாத காங்கிரசில் இருந்தவர் ஆவார். கடந்த 2016-ம் ஆண்டு தான் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

இந்தநிலையில் கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களை வைத்து, பா.ஜனதா சிவசேனாவை குறிவைப்பதாக சஞ்சய் ராவத் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எங்களை குறிவைக்க மராட்டிய பா.ஜனதா கட்சியில் புதிதாக சோ்ந்தவர்களின் உதவியை பெற்று இருப்பது துரதிருஷ்டவசமானது. இதற்கு முன் சிவசேனாவை எதிர்த்தவர்கள் அரசியலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. ஆட்சியில் பங்கு கிடைக்கும் என சிலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பா.ஜனதாவில் சேர்ந்தனர். தற்போது பா.ஜனதா ஆட்சியில் இல்லாததால் அவர்கள் பதற்றத்தில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல சாம்னா பத்திரிகையில், “சேனா பவன், ஒன்றுபட்ட மராட்டியத்திற்காக உயிர்நீத்தவர்களின் நினைவிடத்திற்கு (உத்தத்மா சவுக்) சமமானது. ராஜ்னி பட்டேல் என்ற காங்கிரஸ் தலைவர் சிவசேனாவை அழித்து, சேனா பவனை மூட வேண்டும் என கனவு கண்டார். ஆனால் அவர் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் இருந்து காணாமல் போனார்.

சிலர் சேனா பவன் மீது கல்லெறிய முயற்சி செய்தார்கள் (ஜூன் மாதம் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் இடையே சேனா பவன் முன் நடந்த மோதல்). அவர்களை நாங்கள் ஆஸ்பத்திரிக்கு பார்சல் செய்து அனுப்பிய சம்பவத்தை பா.ஜனதா தலைவர்கள் மறந்து இருக்கமாட்டார்கள்” என கூறப்பட்டுள்ளது.

Next Story