முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட விடமாட்டோம்
முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட விடமாட்டோம் என்றும், கேரள அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேனி:
புதிய அணை விவகாரம்
தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக உள்ளது. இந்த அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.
புதிய அணை கட்டுவதற்காக கேரள சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சிறப்பு சட்டம் செல்லாது என்றும், அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த அனுமதி அளித்தும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது.
அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அமைக்கப்பட்ட மூவர் கண்காணிப்பு குழுவினர் பல்வேறு கட்ட ஆய்வுகள் செய்து அணை பலமாக இருப்பதாக உறுதி அளித்துள்ளனர். இருப்பினும் புதிய அணை கட்டும் பிரச்சினை கேரளாவில் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கேரள மாநில சட்டமன்றத்தில் அந்த மாநிலத்தின் நீர்ப்பாசனத்துறை மந்திரி ரோஸி அகஸ்டின் பேசுகையில், முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடந்து வருவதாகவும், இந்த அணை கட்டுவதற்காக தமிழக-கேரள முதல்-அமைச்சர்கள் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறினார்.
கேரள அரசுக்கு கண்டனம்
கேரள நீர்ப்பாசனத்துறை மந்திரியின் இந்த பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜசேகர், ஒருங்கிணைப்பாளர் அன்வர் ஆகியோர் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள், முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்டுவோம் என்பது கேரள அரசியல்வாதிகளின் குரலாக உள்ளது. அணை வலுவாக உள்ளதாக 2 முறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. மத்திய அரசு நியமித்த நிபுணர் குழுவினர் மற்றும் கேரள அரசு நியமித்த நிபுணர் குழுவினரும் அணையில் ஆய்வுகள் செய்து மிகவும் பலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மதிக்காமல் கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சிப்பது கண்டனத்துக்குரியது.
உணவுப்பொருட்கள்
இதன் மூலம் கேரள அரசு தமிழ்நாட்டையும், 5 மாவட்ட விவசாயிகளையும் உரசிப் பார்க்கிறது. புதிய அணை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழக அரசும் இதற்கு அனுமதிக்காது என நம்புகிறோம். யார் நினைத்தாலும் முல்லைப்பெரியாறு அணையை இடிக்க முடியாது.
அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்ற முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு எந்த உணவுப் பொருட்களையும் கொண்டு செல்ல விடமாட்டோம். கேரள அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றனர்.
பின்னர், சாக்குலூத்து மெட்டுச்சாலை அமைக்க வேண்டும், தேனி மாவட்ட காப்புக்காடுகளை பாதுகாப்பதோடு, காப்புக்காடுகளில் தனியார் அமைத்துள்ள சுற்றுலா பயணிகளுக்கான கொட்டகைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம், விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story