அவலாஞ்சி அணையில் மேலும் ஒரு விவசாயி பிணமாக மீட்பு
அவலாஞ்சி அணையில் மூழ்கிய மேலும் ஒரு விவசாயி பிணமாக மீட்கப்பட்டார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே எடக்காடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது 43) என்பவர் நேற்று முன்தினம் அவலாஞ்சி அணை கரையோரத்தில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு சென்றார். அவருடன், அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் பி.சரவணன் (42), ராமராஜ் (43), சரவணன் (45) ஆகிய 3 பேர் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மதியம் சாப்பிட்டு விட்டு அணை பகுதிக்கு கை கழுவ சென்றனர். அப்போது பி.சரவணன் தண்ணீரில் இறங்கி குளித்ததாக தெரிகிறது. அதில் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றார். அவரை ராமராஜ் காப்பாற்ற முயன்றார்.
ஆனால், இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற 2 பேரும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஊட்டி தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் பி.சரவணன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இரவு நேரமானதால் மற்றொருவரை தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் தீயணைப்பு வீரர்கள் பரிசல் மூலம் அவலாஞ்சி அணையில் ராமராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 1.30 மணியளவில் அவரை பிணமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து எமரால்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அணையில் மூழ்கி 2 பேர் இறந்தது கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க அணை பகுதிகளுக்குள் இறங்கி சுற்றி பார்க்க சொல்லக்கூடாது. குளிப்பதற்கோ அல்லது செல்பி எடுப்பதற்கோ செல்லக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story