“சொத்து வரி உயர்வு மக்களுக்கு தாங்க முடியாத சுமை”
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு மக்களுக்கு தாங்க முடியாத சுமை என்று தேனியில், ம.தி.மு.க. தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ கூறினார்.
தேனி:
தேனி மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட தொழில் பாதிப்புகளில் இருந்து இப்போது தான் மக்கள் மீண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் மரண அடியாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இலவச திட்டங்களால் இலங்கை போன்ற நிலை இந்தியாவுக்கு வரும் என்று பா.ஜ.க.வினர் தரப்பில் கூறி வருகிறார்கள்.
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த உத்தரபிரதேச மாநில மக்களுக்கு அரசு இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கியது. அது மக்களுக்கு மிகவும் பயன் அளித்தது. இந்த இலவச திட்டத்தால் மட்டுமே பா.ஜ.க. அங்கு மீண்டும் வெற்றி பெற்றது. தமிழகத்தில் சொத்து வரியை கூட்டியதை தவிர்த்து இருக்கலாம். இந்த சுமையை மக்களால் தாங்க முடியாது. நிச்சயம் முதல்-அமைச்சர் இதை பரிசீலிப்பார் என நம்புகிறேன். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்து வருகிறது. நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை முதலில் எதிர்த்தது வைகோ தான். இந்த திட்டங்களால் தேனி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் பாதிக்கப்படும். இப்போது இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story