தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயன்படாத உடற்பயிற்சிகூடம்
சேலம் மாவட்டம் கருமந்துறையில் அரசு சார்பில் உடற்பயிற்சிகூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உடற்பயிற்சி கூடம் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நீண்ட காலமாக அங்குள்ள உடற்பயிற்சி கருவிகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு காணப்படுகிறது. இதுபற்றி புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடற்பயிற்சிகூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ரீகன், கருமந்துறை, சேலம்.
சோலார் விளக்குகள் பொருத்தலாமே
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி, பெங்களூரு பிரதான சாலை மற்றும் மாவட்டத்தின் நுழைவு சாலையுமான மெயின் ரோட்டில் சோலார் விளக்குகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட காங்கிரீட் போடப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் சோலார் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள், குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சோலார் விளக்குகள் பொருத்த வேண்டும்.
-பொதுமக்கள், பழைய தர்மபுரி.
தெருவிளக்குகள் எரியவில்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் மலையாண்ட அள்ளி பஞ்சாயத்து புதூர் கிராமத்தில் 15 நாட்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. அந்த பகுதியில் சுமார் 100 வீடுகள் உள்ளன. இரவு நேரங்களில் பெண்கள், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் தெருவிளக்குகளை எரியச் செய்ய வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், புதூர், கிருஷ்ணகிரி.
நோயாளிகள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை அடுத்த கவுதாளம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நோயாளிகளை சரியாக கவனிக்காததால் கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் சுகாதார நிலையத்திற்கு நிரந்தரமாக செவிலியர் நியமிக்க வேண்டும். தினமும் மருந்துகள் வழங்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கவுதாளம், கிருஷ்ணகிரி.
போக்குவரத்து நெரிசல்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அண்ணா சிலை சுற்றியுள்ள சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கிறது. பொதுமக்கள் நலன் கருதி போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும்.
-ச.பாஸ்கர், தாரமங்கலம், சேலம்.
ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிரமம்
தர்மபுரி மாவட்டம் கந்தசாமி வாத்தியார் தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு முன்பு கைரேகை பதிவு வைக்க வேண்டும். கைரேகை பதிவு செய்யும் எந்திரம் அடிக்கடி பழுதடைந்து பயன்படாமல் இருக்கிறது. இதனால் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள், வயதானவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த எந்திரத்தை சரிசெய்து மக்களுக்கு பொருட்கள் வழங்க செய்ய வேண்டும்.
-பாலு, தர்மபுரி.
தண்ணீர் பிரச்சினை
சேலம் 52-வது வார்டில் தாழ்வான பகுதியில் உள்ள மக்களுக்கு தண்ணீர் அதிகமாக கிடைக்கிறது. மேடான பகுதியில் உள்ள மக்களுக்கு தண்ணீர் சரிவர கிடைப்பது இல்லை. போதிய தண்ணீர் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த வார்டில் அனைத்து பகுதி மக்களுக்கும் தண்ணீர் சரியான அளவு கிடைக்கச் செய்ய வேண்டும்.
-சேதுபதி, 52-வது வார்டு, சேலம்.
Related Tags :
Next Story