செல்போனை உடைத்துவிட்டு பழுதுபார்க்க பணம் தராததால் ஆத்திரம்; இளைஞர் கொலை


செல்போனை உடைத்துவிட்டு பழுதுபார்க்க பணம் தராததால் ஆத்திரம்; இளைஞர் கொலை
x

செல்போனை உடைத்துவிட்டு அதை பழுதுபார்க்க பணம் தராததால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி,

தலைநகர் டெல்லியின் இந்திரபுரி பகுதியில் ஒரு நபர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர் இந்திரபுரியை சேர்ந்த நிதிஷ் (வயது 22) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் நிதிஷை கத்தியால் குத்தி கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணையை தொடங்கினர்.

இந்திரபுரியின் ரஞ்சித் நகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் அர்ஜூன் (வயது 22) என்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர். அர்ஜூனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நிதிஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் அர்ஜூன் போலீசிடம் தெரிவித்துள்ளார். நிதிஷ் தனது செல்போனை உடைத்ததாகவும், அதை பழுதுபார்க்க பணம் தரவில்லை என்றும் அர்ஜூன் தெரிவித்துள்ளான். சென்போனை பழுதுபார்க்க பணம் தராததால் தனக்கு நிதிஷூக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் நிதிஷை கத்தியால் குத்துவிட்டு தப்பிச்சென்றதாகவும் அர்ஜூன் தெரிவித்தான்.

இதையடுத்து அர்ஜூனை கைது செய்த போலீசார், ரத்தக்கரை படிந்த கத்தி மற்றும் சட்டை, உடைந்த நிலையில் இருந்த செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story