மராட்டியம்: விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு


மராட்டியம்: விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
x

மராட்டியத்தில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை திடீரென புழுதிப்புயல் வீசியது. புழுதிப்புயலுடன் கனமழையும் பெய்தது. இதனிடையே, மும்பையின் காட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் இரும்பு சாரங்களுடன் 100 அடி உயர விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை வீசிய புழுதிப்புயலில் விளம்பர பதாகை இரும்பு சாரங்களுடன் சரிந்து விழுந்தது. இதில் பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் இருந்த வீடுகள் நொறுங்கின. மேலும், இந்த சம்பவத்தில் விளம்பர பதாகைக்குள் பலர் சிக்கிகொண்டனர். விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விளம்பர பதாகைக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் நேற்று 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இதையடுத்து மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் விளம்பர பதாகை விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இச்சம்பவத்தில் 74 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, விளம்பர பதாகை வைத்த நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story