கேரளாவில் ஓட்டு எண்ணிக்கையன்று முழு ஊரடங்கு தேவை இல்லை - கேரளா ஐகோர்ட்டு உத்தரவு


கேரளாவில் ஓட்டு எண்ணிக்கையன்று முழு ஊரடங்கு தேவை இல்லை - கேரளா ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 April 2021 8:55 PM GMT (Updated: 27 April 2021 8:55 PM GMT)

அரசும், தேர்தல் ஆணையமும் எடுத்துள்ள தொற்று கட்டுப்பாடு நடவடிக்கைகள் திருப்தியாக உள்ளதால், ஓட்டுஎண்ணிக்கையன்று( ேம 2-ந் தேதி) கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்த தேவை இல்லை என ஐகோா்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 2-ந் தேதி அன்று முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட கோரி கேரள ஐகோர்ட்டில் பல்வேறு தரப்பில் இருந்து 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

அரசு தரப்பில் ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட, ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் தினத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு குறித்தான தீர்மான நகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதே போல் மே 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் தினத்தில் கூட்டம் கூடுதல், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு வரும் பொது மக்கள், கட்சி தொண்டர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ள தடை, வெற்றி பேரணி நடத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவு அறிக்கை ஆகியவை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட்டு, ஏற்கனவே கேரளாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருப்பதாலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் தினத்தில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் திருப்திகரமாக இருப்பதால், அன்றைய தினம் கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்த தேவையில்லை என்று உத்தரவிட்டது.

Next Story