ஊரடங்கு எதிரொலி; டெல்லியில் 17-ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு


ஊரடங்கு எதிரொலி; டெல்லியில் 17-ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 9 May 2021 11:45 PM GMT (Updated: 9 May 2021 11:45 PM GMT)

டெல்லியில் 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரெயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது. அங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

டெல்லியில் கொரோனா பரவல் குறையத்தொடங்கி இருந்தாலும், தற்போதும் அங்கு ஏராளமானோர் தினமும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி வருகிற 17-ந்தேதி அதிகாலை வரை இந்த ஊரடங்கை நீட்டிப்பதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். இந்த நாட்களில் மெட்ரோ ரெயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதைப்போல திருமணங்களை வீடுகளில் அதிகபட்சமாக 20 பேருடன் நடத்திக்கொள்ள வேண்டும் எனவும் பொது இடங்களில் திருமணங்களுக்கு தடை விதிப்பதாகவும் அவர் அறிவித்தார்.

Next Story