புதுச்சேரி பா.ஜ.க. தலைவர்கள் டெல்லியில் அவசர ஆலோசனை: சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திட்டமா?


புதுச்சேரி பா.ஜ.க. தலைவர்கள் டெல்லியில் அவசர ஆலோசனை: சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திட்டமா?
x
தினத்தந்தி 29 May 2021 11:40 PM GMT (Updated: 29 May 2021 11:40 PM GMT)

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி பா.ஜ.க. தலைவர்கள் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தியதால் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திட்டமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சர் பதவி
புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்றார்.இந்த புதிய அரசில் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக இரு கட்சியினரும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதாவது துணை முதல்-அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவி ஆகியவற்றை கேட்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. அழுத்தம் கொடுத்து வருகிறது.

பா.ஜ.க. ஏற்க மறுப்பு
ஆனால் துணை முதல்-அமைச்சர் உள்பட 2 அமைச்சர் பதவியை மட்டுமே விட்டுத்தர முடியும். மேலும் துணை சபாநாயகர் பதவியை தருவதாக ரங்கசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதை பா.ஜ.க. ஏற்க மறுத்து வருகிறது.நியமன எம்.எல்.ஏ.க்கள், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மூலம் தங்கள் பலத்தை 12 ஆக உயர்த்தி உள்ளதால், தாங்கள் கேட்ட பதவிகளை தருமாறு பா.ஜ.க. குடைச்சல் கொடுத்து வருகிறது. இதற்கு ரங்கசாமி தொடந்து மறுப்பு தெரிவிக்கவே, அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

ஜே.பி.நட்டாவுடன் சந்திப்பு
இந்த பரபரப்பான சூழ்நிலையில் புதுவை அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்ததன்பேரில் பா.ஜ.க. தலைவர்களும், எம்.எல்.ஏ.க்களுமான நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம் ஆகியோர் டெல்லி சென்றனர்.அங்கு நேற்று மாலை தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, புதுவை பொறுப்பாளர் சந்தோஷ் ஜி ஆகியோரை அவர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது புதுவையில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விளக்கிக் கூறினார்கள். கூட்டணி அரசில் தங்களுக்கு தரவேண்டிய அமைச்சர் பதவி குறித்தும் வலியுறுத்தினார்கள்.இதை கேட்டுக்கொண்ட ஜே.பி.நட்டா, இதுதொடர்பாக ரங்சாமியுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் புதுவையில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பா.ஜ.க.வினர் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சபாநாயகர் பதவி
புதுச்சேரியில் புதிய எம்.எல்.ஏ.க்கள் கடந்த 26-ந் தேதி பதவி ஏற்றுக் கொண்ட நிலையில் அடுத்ததாக சட்டசபை கூட்டத்தை கூட்டி சபாநாயகர், துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இதற்கிடையே கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் வகையில் அமைச்சரவையில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்படும் இடங்கள், இலாகாக்கள் என்ன? சபாநாயகர் பதவி கிடைக்குமா? என்பது பற்றிய விவரங்களை கேட்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.இதில் சமரசம் ஏற்படுமானால் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வில் சிக்கல் இருக்காது. அப்படி இல்லாமல் போனால் சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் பா.ஜ.க. தனிப்பாதையை தேர்ந்தெடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் புதுவை பா.ஜ.க. தலைவர்கள் டெல்லி மேலிடத்துடன் ஆலோசனை நடத்தி இருப்பது உள்ளூர் அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

Next Story