அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்


அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்
x

அமர்நாத் பனி லிங்கத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூன் 29 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறைவடைகிறது. அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை முன்பதிவு தொடங்கி உள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் மலை மீட்புக் குழுக்கள் சிறப்புப் பயிற்சி பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமர்நாத் குகையை அடைய இரண்டு மலையேற்றப் பாதைகள் உள்ளன. (14 கி.மீ)பால்டால் வழியாக குறுகிய பாதை, (48 கி.மீ) ஸ்ரீநகர் வழியாக செல்லும் பாரம்பரிய வழி என இரண்டு வழியாக பக்தர்கள் செல்கின்றனர். இந்த இரண்டு வழிகளிலும் முக்கியமான இடங்களில் பக்தர்களுக்கு உதவுவதற்காக வீரர்கள் நிறுத்தப்பட்டு வருகிறார்கள்.

நாடு முழுவதிலும் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் 540 கிளைகளில் முன்பதிவு நடத்தப்படுவதாக பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரண்டு வழித்தடத்தில் இருந்து யாத்திரை ஒரே நேரத்தில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் ரெஹாரியில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மலர்கள் மற்றும் பந்தல்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. யாத்திரீர்கள் முன்பதிவு செய்ய அதிகாலையில் இருந்தே வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

ஜானிபூரை சேர்ந்த சுமன் தேவி கூறுகையில், யாத்ரீகர்களின் முதல் குழுவில் நாங்கள் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் அமர்நாத் யாத்திரைக்கு முன்பதிவு செய்துள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்றார்.

உலகெங்களிலும் உள்ள பக்தர்களுக்காக, குகை கோவிலில் காலை மற்றும் மாலை நேரத்தில் நடத்தப்படும் ஆரத்தி வழிபாடு நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் என்று அமர்நாத் ஆலய வாரியம் தெரிவித்துள்ளது. 13 வயதுக்குட்பட்டவர்கள்,75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஆறு வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக உள்ள பெண்கள் யாத்திரையில் பங்கேற்க அனுமதி இல்லை என்று வாரியம் கூறியுள்ளது.


Next Story