அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: அயோத்தி ராமர் கோவில் தரிசன நேரம் நீட்டிப்பு


அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: அயோத்தி ராமர் கோவில் தரிசன நேரம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2024 11:44 PM GMT (Updated: 25 Jan 2024 11:48 PM GMT)

காலை 6 மணி முதல், ராமரை தரிசனம் செய்யலாம் என்ற நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அயோத்தி,

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 22-ந்ேததி நடைபெற்றது. இதையடுத்து 23-ந்தேதி முதல் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்தனர். இதனால் அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக, தரிசன நேரத்தை நீட்டித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. காலை 6 மணி முதல், ராமரை தரிசனம் செய்யலாம் என்ற நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இதன்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தரிசனம் செய்யலாம். மதியம் 12 மணி முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆரத்தில் நடைபெறும். நேற்று பவுணர்மி என்பதால் அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ஏராளமானோர் அங்குள்ள சரயு நதியில் புனித நீராடினர்.

பஸ்தி, கோண்டா, அம்பேத்கர்நகர், பாரபங்கி, சுல்தான்பூர் மற்றும் அமேதி ஆகிய இடங்களிலிருந்து வரும் வாகனங்கள் அயோத்தியின் எல்லையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

மேலும் அயோத்தியில் பாதுகாப்புக்காக விரைவு அதிரடிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளனர்

இது தொடர்பாக அயோத்தி போலீஸ் கமிஷனர் கவுரவ் தயாள் கூறுகையில், 'நாங்கள் நிலைமையை எளிதாக்க முயற்சிக்கிறோம். அவசரகால வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பைசாபாத் நகருக்குள் செல்ல அனுமதிக்கிறோம். அதே நேரம் நெரிசலை தவிர்க்க அயோத்தி நகருக்குள் வாகனங்கள் நுழைவது இன்னும் தடை உள்ளது' என்று கூறினார்.

இந்தநிலையில் அயோத்தியில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிப்பது தொடர்பாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், லக்னோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள முக்கிய பிரமுகர்கள், அதுபற்றி அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் மாதம் வரை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்வதை மத்திய மந்திரிகள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story