அதிக பாரம் ஏற்றி சென்றதாக, லாரி டிரைவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம்; போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது


அதிக பாரம் ஏற்றி சென்றதாக, லாரி டிரைவரிடம்   ரூ.10 ஆயிரம் லஞ்சம்; போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2022 6:45 PM GMT (Updated: 8 Nov 2022 6:45 PM GMT)

சிக்கமகளூருவில், அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி டிரைவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு:

ரூ.10 ஆயிரம் லஞ்சம்

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புராவில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வசந்த் குமார் பகாவத். நேற்றுமுன்தினம் இவர், என்.ஆர். புரா பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக சிமெண்ட் மூட்டை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. இதனை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வசந்த் குமார் பகாவத் தடுத்து நிறுத்தினார். அப்போது லாரியை டிரைவர் நிறுத்திவிட்டு தப்பியோட முயற்சித்தார். அவரை, இன்ஸ்பெக்டர் வசந்த் குமார் மடக்கி பிடித்தார்.

விசாரணையில் அவர் பஸ்திமடாவை சேர்ந்த மஸ்தான் என்று தெரியவந்தது. மேலும் அவர் விதிமுறையை மீறி அதிக பாரத்துடன் சிமெண்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது அவர், லாரி டிரைவர் மஸ்தானிடம் அபராத தொகை செலுத்தாமல் விடுவிக்கவேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்கவேண்டும் என்று கேட்டார்.

கைது

இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு அங்கிருந்த வந்த மஸ்தான், சிக்கமகளூரு லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லோக் அயுக்தா போலீசார், மஸ்தானிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அதனை கொடுக்கும்படி சில அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர். அதன்படி நேற்று காலை லாரி டிரைவர் மஸ்தானும், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வசந்த் குமாரை சந்தித்து ரூ.10 ஆயிரத்தை வழங்கினார். அந்த பணத்தை வசந்த்குமார் வாங்கியதும், மறைவதாக நின்ற லோக் அயுக்தா போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story