காங்கிரசின் அரசியல் பிரித்தாளும் கொள்கையை அடிப்படையாக கொண்டது - பிரதமர் மோடி விமர்சனம்


காங்கிரசின் அரசியல் பிரித்தாளும் கொள்கையை அடிப்படையாக கொண்டது - பிரதமர் மோடி விமர்சனம்
x

காங்கிரஸ் கட்சியின் அரசியல் பிரித்தாளும் கொள்கையை அடிப்படையாக கொண்டது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

ஆமதாபாத்,

182- சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் திங்கள் கிழமை அதாவது வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.

93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு சில தினங்களே இருப்பதால் குஜராத்தில் பாஜகவினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள சோஜித்ரா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், "காங்கிரசிற்கு சர்தார் படேலுடன் மட்டுமல்ல, இந்தியாவின் ஒற்றுமையிலும் பிரச்சினை உள்ளது, ஏனெனில் அவர்களின் அரசியல் பிரித்தாளும் கொள்கையை அடிப்படையாக கொண்டது.

அதே நேரத்தில் சர்தார் படேல் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று நம்பினார். இந்த வேறுபாட்டின் காரணமாக, சர்தார் படேலை காங்கிரஸ் ஒருபோதும் தங்களுடையவராக கருதவில்லை.

காங்கிரஸ் கட்சியினர் பல ஆண்டுகள் (சுதந்திரத்திற்கு முன்பு) ஆங்கிலேயர்களுடன் இணைந்து பணியாற்றினர். இதன் காரணமாக பிரிட்டிசாரின் பிரித்தாளும் கொள்கை மற்றும் அடிமை மனநிலை போன்ற அனைத்து கெட்ட பழக்கங்களையும் காங்கிரஸ் கட்சி உள்வாங்கியது.

சர்தார் படேல் சிலையை மோடி கட்டியதால் அவர்(படேல்) உங்களுக்கு தீண்டத்தகாதவராக ஆகிவிட்டார். சர்தார் படேலை அவமதித்த காங்கிரசை ஆனந்த் மாவட்ட மக்கள் தண்டிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story