108-வது நாள் பயணம் டெல்லி சென்றது; ராகுல் யாத்திரையை யாராலும் நிறுத்த முடியாது - காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை 108-வது நாளில் டெல்லி சென்றடைந்தது. இதில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இந்த யாத்திரையை யாராலும் நிறுத்த முடியாது என காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை, நாடு முழுவதும் பரவலான அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லியில்ராகுல் யாத்திரை
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி 'பாரத் ஜோடோ யாத்ரா' (இந்திய ஒற்றுமை யாத்திரை) என்ற பெயரில் கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார்.
இந்த பாதயாத்திரை 3,570 கி.மீ. தொலைவிலானது.
இது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களைக் கடந்து, 108-வது நாளான நேற்று காலை தலைநகர் டெல்லிக்கு சென்றடைந்தது.
சோனியா குடும்பம் பங்கேற்பு
பதர்பூர் எல்லையில் ராகுலுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டையை நோக்கி யாத்திரை புறப்பட்டது. இதில் அவருடன் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி, மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோரும் நடந்தனர். மேலும் பல எம்.பி.க் களும், சுதந்திர போராட்ட வீரர் களும் கலந்து கொண்டனர்.
இந்த யாத்திரையில் ராகுலின் தாயார் சோனியா காந்தி தனது மொத்த குடும்பத்தினருடன் பங்கேற்று, ராகுலுடன் ஆசிரமம் சவுக் வரையில் சிறிது தூரம் நடந்து வந்தனர்.
ராகுலுடன் கமல்ஹாசன்
இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது மொத்த குடும்பமும் பங்கேற்று நடந்தது இதுவே முதல் முறை ஆகும். சாலையின் இரு ஓரங்களிலும் குவிந்திருந்த மக்களைப் பார்த்து ராகுல் காந்தியும், அவரது குடும்பத்தினரும் உற்சாகமாக கையசைத்தனர்.
இந்த யாத்திரை டெல்லி செங்கோட்டையை நெருங்கிய தருணத்தில் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனருமான கமல்ஹாசன் இணைந்து நடந்தார். செங்கோட்டையில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த பிரமாண்ட கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியது கூட்டத்தில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
2,800 கி.மீ. நடந்து வந்தேன்
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-
நான் 2,800 கி.மீ. நடந்து வந்துள்ளேன். நாட்டில் எங்கேயும் நான் வன்முறையையோ, வெறுப்புணர்வையோ பார்க்கவில்லை. ஆனால் எல்லா நேரங்களிலும் நான் டெலிவிஷனில் அவற்றைப் பார்க்கிறேன்.
பல்லாயிரம் கோடி ரூபாய் மாபெரும் தொழில் அதிபர்களுக்கு தரப்படுகிறது. ஆனால் சாமானியர்களுக்கு தரப்படுவதில்லை. இவையெல்லாம் கொள்கைகள் அல்ல. சிறிய தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகளை அழிக்க வந்த ஆயுதங்கள் ஆகும்.
இந்த யாத்திரை, இந்தியாவை இணைப்பதைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூக வெறுப்பு, வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வைத்தான் பரப்பும்.
பா.ஜ.க. மீது குற்றச்சாட்டு
எனது பெயரைக் கெடுப்பதற்காக பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். ஆனால் நான் ஒரு மாத காலத்திலேயே நாட்டுக்கு உண்மையைக் காட்டி உள்ளேன்.
இந்த யாத்திரையில் மக்கள் என் மீது காட்டிய அன்புக்கும், அளித்த ஆதரவுக்கும் நன்றி செலுத்துகிறேன்.
ராஜஸ்தானில் நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் அன்பை பரப்புவதற்காக மக்கள் லட்சக்கணக்கான கடைகளைத் திறந்துள்ளனர்.
நாட்டு மக்களை உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்காக இந்து-முஸ்லிம் பெயரால் டெலிவிஷன் வழியாக எப்போதும் வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. இது சத்தியம்.
இது மோடி அரசு அல்ல
இந்து-முஸ்லிம் பெயரால் 24 மணி நேரமும் வெறுப்புணர்வை பரப்பி விட்டு, உங்கள் பணத்தை உங்களிடம் தருவார்கள். ஆனால் உங்கள் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் இன்னும் பிற சொத்துகளை தங்கள் நண்பர்களுக்கு விற்றுவிடுவார்கள். அவர்கள் எப்போதும் உங்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பார்கள். மத்தியில் இருபபது நரேந்திர மோடியின் அரசு அல்ல. இது அம்பானி மற்றும் அதானியின் அரசு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சர்ச்சையை ஏற்படுத்திய அறிவுரை
சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிதீவிரமாக பரவிவருவதால், இந்தியாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரையில், கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும், இல்லையேல் யாத்திரையை நிறுத்தி விட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையொட்டி ராகுல் காந்திக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
'யாராலும் தடுத்து நிறுத்த முடியாது'
ஆனால் யாராலும், எந்த சக்தியாலும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை தடுத்து நிறுத்த முடியாது என்று காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதுபற்றி இந்தக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறும்போது, "ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை அரசியல் லாபத்துக்கானது அல்ல. இது விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சீன ஊடுருவல்கள் போன்ற மக்களின் பிரச்சினைகளை எழுப்புவதற்கானது. இந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் பிரமாண்ட வெற்றி, பா.ஜ.க.வுக்கு பயத்தை அளித்துள்ளது. அதனால் கொரோனா பிரச்சினையை எழுப்புகிறது. இங்கு எங்கேயும் கொரோனா இல்லை. இந்த யாத்திரையை நிறுத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள். நாங்கள் பணிந்து விட மாட்டோம். ராகுல் காந்தி அவரது யாத்திரையை தொடருவார்" என அறிவித்தார்.
முன்னதாக டெல்லி ஆசிரமம் சவுக்கில் காங்கிரஸ் ஊடகப்பிரிவின் தலைவர் பவன் கெரா நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், "கொரோனா முக்கியமான பிரச்சினைதான். ஆனால் அதை தங்கள் அரசியலுக்கான கருவியாக பா.ஜ.க. பயன்படுத்தக்கூடாது. யாராலும், எந்த சக்தியாலும் யாத்திரையை நிறுத்த முடியாது. உங்களுக்கு துணிவு இருந்தால் யாத்திரையை நிறுத்திப்பாருங்கள். கொரோனா தொடர்பான விதிமுறைகள், நெறிமுறைகளை நாங்கள் பின்பற்றுவோம். அவர்கள் எந்த நெறிமுறைகளையும் அறிவிக்கவில்லை. அவர்கள் கவலை ராகுல் காந்தியின் யாத்திரை, மக்களின் ஆதரவைப் பெறுவதுதான்" என தெரிவித்தார்.
ஓய்வுக்கு பின் தொடரும்
ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்த யாத்திரைக்கு குளிர்காலத்தையொட்டி9 நாள் இடைவேளை விடப்படுகிறது. மீண்டும் வருகிற ஜனவரி மாதம் 3-ந் தேதி காஷ்மீரை நோக்கி இந்த யாத்திரை தொடங்க உள்ளது.