டெல்லி; முதலாளியை கொலை செய்து தப்பியபோது விபத்தில் சிக்கிய வேலைக்காரி


டெல்லி; முதலாளியை கொலை செய்து தப்பியபோது விபத்தில் சிக்கிய வேலைக்காரி
x

டெல்லியில் வீட்டு வேலை செய்த இடத்தில் முன்னாள் முதலாளியை கொலை செய்து விட்டு தப்பியபோது வேலைக்காரி விபத்தில் சிக்கினார்.

புதுடெல்லி,

டெல்லியின் வடமேற்கே ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்த தம்பதி பிரவீன் ஜெயின் மற்றும் சோனியா ஜெயின். இவர்களுக்கு சுரபி என்ற மகள் உள்ளார். இவர்களது வீட்டு வேலைக்கு உதவியாக சுவேதா என்பவர் ஓராண்டாக பணியாற்றி வந்து உள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் அவர் வேலையில் இருந்து நின்று விட்டார். இந்த சூழலில் சம்பவத்தன்று, வீட்டு சமையலறையில் சுரபி தேநீர் தயாரித்து கொண்டு இருந்து உள்ளார். அவரது தந்தை வேறு அறையில் இருந்தபோது, திடீரென தாயாரின் அலறல் சத்தம் கேட்டு உள்ளது.

உதவி கேட்டு சோனியா அலறியதும், அறையில் இருந்த அவரது கணவர் ஓடி சென்று உள்ளார். இதில், அவரது மனைவி சோனியா கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். தடுக்க வந்த பிரவீன் மீதும் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலில் சுவேதாவும், அவரது கணவர் ஆகாசும் ஈடுபட்டு உள்ளனர். பெற்றோர் தாக்கப்படும் நிகழ்வை பார்த்து மகள் சுரபி கத்தி, கூச்சல் போட்டு உள்ளார்.

அதன்பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் உடனடியாக அந்த வீட்டில் இருந்து தப்பி வெளியேறினர். இந்த சம்பவத்தில் சோனியா உயிரிழந்து விட்டார். அவரது கணவர் படுகாயங்களுடன் கிடந்து உள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி விசாரணை செய்ததில், சுவேதா, அவரது கணவர் ஆகாஷ் இருவரும் தப்பி சென்றபோது ஜகாங்கீர்புரி பகுதியில் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.

அவர்கள் இருவரும் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களை சிகிச்சை பெறும்போதே, போலீசார் கைது செய்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில், இரு தரப்பினருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது என கூறப்படுகிறது.

எனினும், வேறு கோணங்களிலும் போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. சுவேதாவின் கணவர் வணிக வளாகம் ஒன்றில் பாதுகாவலராக பணியில் இருந்து வருகிறார்.


Next Story