டெல்லி: இ-ரிக்சாவுக்கு சார்ஜிங்; மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி
டெல்லியில் இ-ரிக்சாவுக்கு சார்ஜிங் செய்த மெக்கானிக் மின்சாரம் தாக்கி பலியான அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் நிஹால் விகார் பகுதியில் இ-ரிக்சா எனப்படும் மின்சாரம் உதவியுடன் இயங்க கூடிய ஆட்டோ ரிக்சாவுக்கு சார்ஜிங் செய்ய கூடிய நிலையம் ஒன்று உள்ளது. இதில் மெக்கானிக்காக இருந்து வந்தவர் தர்மேந்தர் (வயது 34).
டெல்லி விகாஸ் புரி நகரின் இந்திரா கேம்ப் பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில், இ-ரிக்சா ஒன்றுக்கு அவர் சார்ஜிங் செய்தபோது மின்சாரம் தாக்கியுள்ளது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதனை தொடர்ந்து அந்த சார்ஜிங் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்த போலீசார், அதற்கு சீல் வைத்து பூட்டினர்.
இதன்பின்பு, பிரேத பரிசோதனைக்கு பின் தர்மேந்தரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதன் இறுதி அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.
இதுபற்றி எப்.ஐ.ஆர். ஒன்றை போலீசார் பதிவு செய்து அதன் நகரை மெக்கானிக்கின் குடும்பத்தினரிடம் அளித்துள்ளனர். டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.