பெங்களூருவை வளர்ச்சி அடைய செய்ய அனைவரும் கைகோர்ப்போம்; அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அழைப்பு


பெங்களூருவை வளர்ச்சி அடைய செய்ய அனைவரும் கைகோர்ப்போம்; அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அழைப்பு
x
தினத்தந்தி 5 Jun 2023 9:14 PM GMT (Updated: 6 Jun 2023 10:38 AM GMT)

பெங்களூருவை வளர்ச்சி அடைய செய்ய அனைவரும் கைகோர்ப்போம் என்று அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவை வளர்ச்சி அடைய செய்ய அனைவரும் கைகோர்ப்போம் என்று அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெருமை சேர்ப்போம்

பெங்களூருவின் வளர்ச்சி தொடர்பாக பெங்களூரு நகர அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூருவை சேர்ந்த மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்கரெட்டி, ஜமீர்அகமதுகான், எம்.பி.க்கள் டி.கே.சுரேஷ், பி.சி.மோகன், தேஜஸ்வி சூர்யா, எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பெங்களூருவின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஆலோசனைகளை கூறினர். இந்த கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

தேர்தல் அரசியல் முடிந்துவிட்டது. நமக்கு அரசியல் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் சரி, அதை நாம் ஓரத்தில் வைத்துவிடலாம். நீங்கள் பெங்களூருவின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பெங்களூரு நகரின் பெருமை குறித்து பேசினார். தற்போது பிரதமரும் அதுபற்றி கூறியுள்ளார். அதனால் நாம் அனைவரும் சேர்ந்து பெங்களூருவை வளர்ச்சி அடைய செய்து அதன் மூலம் நகருக்கு மேலும் பெருமை சேர்ப்போம்.

நம்பிக்கை இல்லை

நாம் அரசியலை விட்டு வளர்ச்சியை ஏற்படுத்தலாம். நீங்கள் (பா.ஜனதா) அரசியல் செய்வதாக இருந்தாலும், நானும் அரசியல் செய்ய தயராக உள்ளேன். அன்புக்கு அன்பு கொடுப்பேன். மோதல் வந்தால் அதையும் எதிர்கொள்ள தயார். எனக்கு விரோத அரசியல் தேவை இல்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.

பெங்களூரு நகர மக்கள் அடிப்படை வசதிகள் பற்றாக்குறையால் கஷ்டப்படுகிறார்கள். ஊழலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது நமது கடமை ஆகும். பெங்களூருவில் எந்தெந்த பகுதிக்கு எவ்வளவு நீர் வினியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஒதுக்கி வையுங்கள்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெங்களூருவின் பங்கு முக்கியமானது. கர்நாடகத்தில் இருந்து மத்திய அரசுக்கு அதிகளவில் வரிகள் செல்கின்றன. அங்கிருந்து கர்நாடகத்தின் பங்கை பெற்று வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளலாம். பெங்களூருவின் வளர்ச்சியில் அதிகாரிகளின் பங்கும் முக்கியமானது.

இதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டாலோ அல்லது கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்தாலோ அதை சகித்துக்கொள்ள மாட்டேன். அத்தகைய அதிகாரிகள் இடத்தை காலி செய்துவிட்டு செல்லலாம். உங்களின் தனிப்பட்ட நலனை ஒதுக்கி வையுங்கள். நல்ல எதிர்காலத்திற்காக நேர்மையான முறையில் சிந்தித்து செயல்படலாம். இதன் மூலம் பெங்களூருவை நாம் முன்னேற்ற வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு

இந்த கூட்டத்திற்கு டி.கே.சிவக்குமார் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தார். அதாவது காலை 11 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம் சுமார் 12 மணிக்கு தொடங்கியுள்ளது. டி.கே.சிவக்குமார் வரத்தாமதம் ஆனதை அடுத்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அஸ்வத் நாராயண், எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் இந்த செயலுக்கு டி.கே.சிவக்குமார் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அஸ்வத் நாராயண், 'எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு வரும்படி டி.கே.சிவக்குமார் எனக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவித்தார். அதை ஏற்று நான் இந்த கூட்டத்திற்கு வந்தேன். ஆனால் ஒரு மணி நேரம் ஆகியும் அவர் வரவில்லை. அதனால் நான் அந்த கூட்டத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன்' என்றார்.


Next Story