சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி; டி.கே.சிவக்குமார் பேச்சு


சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி; டி.கே.சிவக்குமார் பேச்சு
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

துமகூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சி மாநாடு துமகூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

காங்கிரஸ் வெற்றி

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. நாங்கள் மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள ஒரு கருத்து கணிப்பை நடத்தினோம். அதில் 136 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், பா.ஜனதா வெறும் 60 தொகுதிகளை மட்டுமே பிடிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

அதனால் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் நேரத்தை விரயமாக்க வேண்டாம். துமகூரு மாவட்டத்தில் உள்ள அந்த கட்சிகளின் நிர்வாகிகள் காங்கிரசில் சேரலாம். இங்கு பழையவர்கள், புதியவர்கள் என்ற பேதம் கிடையாது. பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், வளர்ச்சி பற்றி பேச வேண்டாம், லவ் ஜிகாத் பற்றி பேசுங்கள் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துகிறார். அவர்களுக்கு வளர்ச்சி முக்கியம் அல்ல.

சூரியசக்தி திட்டம்

காங்கிரஸ் ஆட்சியில் துமகூருவில் 2,400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரியசக்தி திட்டத்தை அமல்படுத்தினோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற, சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை நடத்துவோம். கர்நாடகத்திற்கு ஊழல்கள் மூலம் பா.ஜனதாவினர் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த களங்கத்தை நாங்கள் போக்குவோம். பா.ஜனதா இந்த சமூகத்தை உடைக்கிறது. மத உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டுகளை பெற அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

இந்த மாநாட்டில் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த காந்தராஜூ காங்கிரசில் சேர்ந்தார். எம்.எல்.சி.யாக இருந்த அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story