பணமோசடி புகார்: கொல்கத்தாவில் அமலாக்கத்துறை சோதனையில் ரூ.7 கோடி பறிமுதல்
கொல்கத்தாவில் 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
கொல்கத்தா,
மொபைல் கேமிங் செயலியின் மூலம் பணமோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபர் அகமதுகான் என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2021-ம் ஆண்டில் அவருக்கு எதிராக பெடரல் வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, தொழிலதிபர் அகமதுகான் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவை சேர்ந்தவர்களால் கட்டுப்படுத்தப்படும் கடன் செயலிகளுடன் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சுமார் 7 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டு வந்து சோதனையில் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.