முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு வழக்கில் இடையீட்டு மனு: சுப்ரீம் கோர்ட்டில் 23-ந்தேதி விசாரணை


முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு வழக்கில் இடையீட்டு மனு: சுப்ரீம் கோர்ட்டில் 23-ந்தேதி விசாரணை
x

கோப்புப்படம்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு வழக்கில் இடையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 23-ந்தேதி விசாரணை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன.நிலுவையில் உள்ள அம்மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு நவம்பர் 23-ந்தேதி மீண்டும் விசாரிக்க உள்ளது.

இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சார்பில் வக்கீல் மாளவிகா ஜெயந்த் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

ஜல்லிக்கட்டு போட்டிகள் இல்லாமல் போயிருந்தால் காங்கேயம் ரக பசுக்களும், காளைகளும் மறைந்து போயிருக்கும். ஜல்லிக்கட்டு போட்டிகள் வெறும் கலாசாரம் தொடர்புடையது மட்டுமல்ல. மாறாக, பாரம்பரிய ரக பசுக்களையும், காளையையும் பாதுகாக்கவும் உதவுகின்றன. பாரம்பரிய மாடுகளை பாதுகாக்கும் அடையாள, அங்கீகாரமாக ஜல்லிக்கட்டு திகழ்ந்து வருகிறது. மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் குறிப்பாக காளைகளுக்கும் இடையேவுள்ள பிணைப்பை எடுத்துக்காட்டும் தொன்மையான, பண்பாட்டு அடையாளமாக ஜல்லிக்கட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு பெருமளவில் நடைபெறும் பகுதியின் மக்கள் பிரதிநிதியாகவும், காளைகளை வளர்த்து, கலாசார, பாரம்பரிய ஜல்லிக்கட்டில் பங்கேற்று வரும் மனுதாரரின் இடையீட்டு மனுவை ஏற்றால், அது கோர்ட்டுக்கு பெருமளவில் உதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story