டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: கூடுதல் போலீசார் குவிப்பு


டெல்லியில் விவசாயிகள் போராட்டம்:  கூடுதல் போலீசார் குவிப்பு
x

டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,



டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் நாளைய தினம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக, தலைநகர் டெல்லிக்கு அவர்கள் வர தொடங்கி உள்ளனர்.

இதற்கு முன்பு, சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி பகுதியில் கடந்த 18-ந்தேதி 75 மணிநேர தர்ணா போராட்ட தொடக்க அறிவிப்பினை வெளியிட்டது. தங்களது நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் தொடங்கியது.

இந்த அமைப்பில் 40 விவசாய இயக்கங்கள் அடங்கியுள்ளன. அவர்கள் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தினை முறையாக அமல்படுத்தும்படி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சூழலில், அரசுக்கு எதிராக கடந்த ஜூலை 31-ந்தேதி பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் வல்லா பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மறியல் போராட்டம் நடத்தினர்.

அம்பாலா பகுதியிலுள்ள ஷாம்பு சுங்க சாவடி, பஞ்ச்குலா பகுதியில் உள்ள பர்வாலா மற்றும் கைத்தால் பகுதியின் சீக்கா என்ற இடத்திலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விவசாயிகளின் வருகை மற்றும் நாளைய போராட்ட அறிவிப்பு ஆகியவற்றை முன்னிட்டு தலைநகர் டெல்லியில், போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு உள்ளனர். டெல்லி-அரியானா திக்ரி எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சிமெண்ட்டால் ஆன தடுப்பான்களையும் போலீசார் அமைத்து வருகின்றனர். அந்த பகுதியில், வாகன சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.


Next Story