புளூ டிக்கிற்கு கட்டணம்; இந்தியாவின் முதல் டுவிட்டர் பயனாளர் கூறுவது என்ன...?


புளூ டிக்கிற்கு கட்டணம்; இந்தியாவின் முதல் டுவிட்டர் பயனாளர் கூறுவது என்ன...?
x
தினத்தந்தி 8 Nov 2022 5:47 AM GMT (Updated: 8 Nov 2022 6:02 AM GMT)

புளூ டிக்கிற்கு கட்டணம் என்ற அறிவிப்புக்கு இந்தியாவின் முதல் டுவிட்டர் பயனாளரான நைனா ரீத்து என்ன கூறுகிறார் என பார்ப்போம்.

புதுடெல்லி,



சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார்.

இந்த டுவிட்டரை பயன்படுத்துவோருக்கான சிறப்பம்சங்களில் ஒன்றாக, தங்களுடையது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என உறுதிபடுத்தி கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

இந்த புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என முதலில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் வர்த்தக யுக்தியாக, டுவிட்டர் புளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (660 இந்திய ரூபாய் மதிப்பு) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது என விலை குறைப்பு செய்து எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டார்.

கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவு செய்யலாம் என்ற சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.




இந்தியாவின் முதல் டுவிட்டர் பயனாளராக உள்ள நைனா ரீத்து டுவிட்டரின் இந்த புதிய மாற்றங்கள், வலைதளத்தின் பரிணாம வளர்ச்சி ஆகியவை பற்றி தனிப்பட்ட எண்ணங்களை கொண்டுள்ளார்.

அவரது 16 ஆண்டுகால டுவிட்டர் பயணத்தில் 22 ஆயிரம் பேர் அவரை பின்தொடர்பவர்களாக உள்ளனர். இது பெரிய எண்ணிக்கை இல்லை என்றபோதிலும், அவருக்கு அளவை விட தரம் முக்கியம் என கூறுகிறார்.

டுவிட்டரின் இந்த மாற்றங்கள் பற்றி, புகைப்பட கலைஞரான ரீத்து என்ன கூறுகிறார் என பார்ப்போம். அவர் கூறும்போது, பின்தொடர்பவர்கள் என்ற பெயரில் எண்ணிக்கைகளை அதிகரிப்பதில் ஒருபோதும் எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை.

அதனை நான் விரும்பினால், போலியான பின்தொடர்பவர்களை விலைக்கு வாங்குவது, மக்கள் தொடர்புக்கான நபர்கள், தொழில்நுட்பங்கள் போன்ற வசதிகள் உள்ளன. ஆனால் எனக்கு, யார் என்னை பின்தொடர்கின்றனர் என்பதே எப்போதும் முக்கியம் வாய்ந்த ஒன்று.

என்னுடன் பேசுபவரை, நான் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். அவர்கள் எனக்கு புதிதாக கற்று கொடுப்பவராக கூட இருக்கலாம். அதிலேயே எனது விருப்பம் உள்ளது. எண்ணிக்கையில் அல்ல.

தற்போதுள்ள காலங்களில், நாம் அனைவரும் பல்வேறு சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி வருகிறோம். இதன்படி, டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் எனக்கு கணக்குகள் உள்ளன. தவிர, எனக்கென்று பிளாக் ஒன்றும் உள்ளது.

இந்தியாவுக்கு டிக்டாக் வந்தபோது, நானும் ஒரு கணக்கை தொடங்கினேன். பயன்படுத்தவில்லை என்றாலும், ஸ்நாப்சேட் கணக்கையும் நான் வைத்திருக்கிறேன். லிங்ட்இன் மற்றும் பின்இன்டிரஸ்டிலும் கூட நான் இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

ரீத்துவின் டுவிட்டர் கணக்கிற்கு புளூ டிக் உள்ள நிலையில், அவரும் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இதுபற்றி கூறிய அவர், பணம் எதற்காக வசூலிக்கப்படுகிறது என்பதற்கான தெளிவான விளக்கங்கள் இல்லை.

புளூ டிக் என்பதற்கான அர்த்தம் முன்பிருந்தது போன்றே இருக்குமா? அல்லது மாற்றப்படுமா? என்பதுபற்றிய சில தெளிவான விவரங்கள் கிடைத்த பின்னரே, என்னால் ஒரு முடிவு எடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடக தளங்களான ஆர்குட் மற்றும் பிளாக்கிங் வரவேற்பு பெற்றிருந்த காலகட்டத்தில், 2006-ம் ஆண்டு டுவிட்டரில் இருந்து வந்த அழைப்பை ஏற்று ரீத்து அதன் பயனாளராக மாறினார். இதனால், டுவிட்டரில் இணைந்த முதல் பயனாளரானார். இவரை பல பிரபலங்களும் கூட பின்தொடர்கின்றனர்.

இதுவரை அவர் 1.75 லட்சம் டுவிட் செய்துள்ளார். இது ஒரு சாதனை பதிவாகும். ஏனெனில் விராட் கோலி, அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்கள் கூட இந்த அளவுக்கு டுவிட்டரில் தங்களது பதிவுகளை வெளியிடவில்லை என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.


Next Story