தகுதியானவர்களே நீதிபதிகளாக நியமிக்கப்படவேண்டுமே தவிர கொலிஜியத்திற்கு தெரிந்தவர்கள் அல்ல - மத்திய சட்டமந்திரி
தகுதியானவரே நீதிபதியாக நியமிக்கப்படவேண்டுமே தவிர கொலிஜியத்திற்கு தெரிந்தவர்கள் அல்ல என்று மத்திய சட்டமந்திரி தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்திய நீதித்துறையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக கொலிஜியம் முறை பின்பற்றப்படுகிறது. கொலிஜியம் என்பது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் 4 பேர் கொண்ட குழுவாகும். இந்த குழு சுப்ரீம் கோட்டிற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது, நீதிபதிகளை இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொலிஜியம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் நீதிபதிகள் நியமன அறிவிப்பை வெளியிட்டு அதற்கான ஒப்புதலை ஜனாதிபதி அளிப்பார்.
இதனிடையே, நீதிபதிகள் நியமனம், கொலிஜியம் முறை குறித்து மத்திய சட்டமந்திரி கிரண் ரிஜிஜூ அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில், மத்திய சட்டமந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, ரிஜிஜூ பேசியதாவது, தற்போதைய சுப்ரீம் கோர்ட்டு கொலிஜீயம் முறை பார்க்கமுடியாத வகையில் வெளிப்படை தன்மையின்றி, புரிந்துகொள்ள கடினமாகவும், தெளிவற்ற நிலையில் உள்ளது. அவ்வாறு இருந்தால் அதற்கு எதிராக துறையின் மந்திரி பேசாமல் யார் பேசுவது?. தகுதியானவர் நீதிபதிகளாக நியமிக்கப்படவேண்டுமே தவிர கொலிஜியத்திற்கு தெரிந்தவர்கள் அல்ல. நீதிபதிகள் வெளிக்காட்டிக்கொள்ளாதபோதும் கொலிஜியம் முறையில் தீவிரமான அரசியல் உள்ளது.
நான் நீதித்துறை குறித்தோ நீதிபதி குறித்தோ விமர்சிக்கவில்லை... சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய கொலிஜியம் முறையில் எனக்கு மகிழ்ச்சியில்லை. சிறந்த கட்டமைப்பிற்காக நாம் தொடர்ந்து பாடுபடவேண்டும்' என்றார்.
மேலும் படிக்க... கொலிஜியம் முறையை மக்கள் விரும்பவில்லை.... நீதிபதிகளை நியமிப்பது அரசின் வேலை - மத்திய சட்டமந்திரி