பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 22-ந் தேதி வெளியீடு


பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கான  இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற   22-ந் தேதி வெளியீடு
x

பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 22-ந் தேதி வெளியிடப்படும் என்று ஐகோர்ட்டில், மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தல் 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மாநகராட்சி தேர்தலை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி கர்நாடக அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வார்டு வரையறை மற்றும் இடஒதுக்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வக்கீல் இஸ்மாயில் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதவிர முன்னாள் கவுன்சிலர்கள் நாகராஜ், மஞ்சுநாத் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான விசாரணையும் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் சந்தன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, நீதிபதி ஹேமந்த் சந்தன் முன்னிலையில் நேற்று முன்தினம் அந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது மாநகராட்சி தேர்தலுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் நீதிபதி ஹேமந்த் சந்தன் கேள்வி எழுப்பினார். அந்த சந்தர்ப்பத்தில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் பனீந்திரா, பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. வருகிற 22-ந் தேதி மாநகராட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும், என்றார். இதையடுத்து, அந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.


Next Story