டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத கனமழை; அனைத்து அரசு துறை ஊழியர்களின் விடுமுறை ரத்து


டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத கனமழை; அனைத்து அரசு துறை ஊழியர்களின் விடுமுறை ரத்து
x

டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்த நிலையில், அனைத்து அரசு துறை ஊழியர்களின் விடுமுறையையும் முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று ரத்து செய்து உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி, மொகல்லா கிளினிக்குகள் போன்ற மக்களுக்கு இலவச சுகாதார வசதிகள் போன்றவற்றை அரசு வழங்கி வருகிறது. மக்களுக்கான பணிகளை திறம்பட செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று கனமழை பெய்தது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 153 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

இதனால் டெல்லிவாசிகளுக்கு அசவுகரியம் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

கடந்த 1982-ம் ஆண்டு ஜூலைக்கு பின்பு அதிக மழை பொழிவு ஏற்பட்ட நிலையில், முதல்-மந்திரி கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், மொத்த பருவகால மழையில் 15 சதவீதம் 12 மணிநேரத்தில் பெய்து உள்ளது. மழைநீர் தேங்கி மக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

அனைத்து மந்திரிகள் மற்றும் டெல்லி மேயர் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று ஆய்வு செய்வார்கள்.

அனைத்து அரசு துறை அதிகாரிகளும் ஞாயிறு விடுமுறையை ரத்து செய்து விட்டு, உடனடியாக களத்திற்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறது என கெஜ்ரிவால் இன்று தெரிவித்து உள்ளார்.


Next Story