சகோதரியை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் வீட்டு காவலில் சிறை வைப்பு


சகோதரியை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் வீட்டு காவலில் சிறை வைப்பு
x

சகோதரி சர்மிளாவை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டு உள்ளார்.



ஐதராபாத்,


தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற பெயரிலான கட்சியை, ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளா ரெட்டி தனியாக தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன் போராட்டம் நடத்துவதற்காக சர்மிளா ரெட்டி காரில் புறப்பட்டு சென்றார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் சென்றது.

இதனை தொடர்ந்து, போலீசார் கிரேன் ஒன்றை கொண்டு வந்தனர். இதன்பின், காரில் சர்மிளா அமர்ந்து இருந்தபோதே, அவரை வழிமறித்து கிரேன் கொண்டு போலீசார் காரை தூக்கி சென்றனர். அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களும் காரின் பின்னால் ஓடினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் சர்மிளா சிறை வைக்கப்பட்டார். பஞ்சகட்டா காவல் நிலையத்தில் சர்மிளாவுக்கு எதிராக ஐ.பி.சி.யின் 353, 333, 327 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சர்மிளாவின் தாயார் ஒய்.எஸ். விஜயம்மா புறப்பட்டு உள்ளார். எனினும், தெலுங்கானா போலீசார் அவரை வீட்டு காவலில் சிறை வைத்துள்ளனர்.


Next Story