'இந்தியா அற்புதமானது அதை விரும்புகிறேன்' - ஹோலி கொண்டாட்டத்தின் போது பாலியல் அத்துமீறலை சந்தித்த ஜப்பான் பெண் பயணி...!


இந்தியா அற்புதமானது அதை விரும்புகிறேன் - ஹோலி கொண்டாட்டத்தின் போது பாலியல் அத்துமீறலை சந்தித்த ஜப்பான் பெண் பயணி...!
x

ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பான் பெண் பயணி கும்பலால் பாலியல் அத்துமீறலை சந்தித்தார்.

டெல்லி,

வடமாநிலங்களில் கடந்த 8-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை பிறர் மீது ஊற்றியும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

அதேபோல், இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பல்வேறு பகுதிகளில் நடத ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

இதனிடையே, தலைநகர் டெல்லியில் பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர்வாசிகளும், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் சேர்ந்து ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஜப்பானை சேர்ந்த பெண் பயணியிடம் சில இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். ஜப்பான் சுற்றுலா பயணியின் முகத்தில் வண்ணப்பொடியை பூசி, தலையில் முட்டையை உடைத்தும் பாலியல் ரீதியில் அத்துமீறல் முயற்சியிலும் ஈடுபட்டனர். தன்னிடம் அத்துமீறிய ஒரு இளைஞனை அந்த இளம்பெண் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணி புகார் அளிக்கவில்லை. ஆனால், சமூகவலைதளத்தில் வைரலான வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹோலி கொண்டாட்டத்தின்பொது வெளிநாட்டு பெண் பயணியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

அதேவேளை, அந்த பெண் சுற்றுலா பயணி தற்போது வங்காளதேசம் சென்றுவிட்டதாகவும், அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் என்று டெல்லி போலீஸ் அறிக்கை வெளியிட்டது.

ஹோலி கொண்டாட்டத்தின் போது வெளிநாட்டு பெண் பயணியிடம் இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாலியல் அத்துமீறலை சந்தித்த ஜப்பான் பெண் சுற்றுலா பயணி இந்தியாவில் இருந்து புறப்பட்டு வங்காளதேசம் சென்ற நிலையில் இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பரவிய கருத்துக்கள், போலீசார் எடுத்த நடவடிக்கைகள், ஹொலி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட இந்த சம்பவம் விவாதப்பொருளானது.

இந்நிலையில், பாலியல் அத்துமீறலை சந்தித்த ஜப்பான் பெண் சுற்றுலா பயணி தனது டுவிட்டர் பக்கத்தில் ஜப்பானிய மொழியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் தான் அந்த வீடியோவை சமூகவலைதலத்தில் பதிவிட்டேன். ஆனால் வீடியோ வைரலானதால் அதை நீக்கிவிட்டேன். அந்த வீடியோவால் புண்படுத்தப்பட்ட நபர்களிடம் நாங்கள் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறோம்.

ஹோலி பண்டிகையின் போது பெண்கள் வெளியே ஆபத்து என கேள்விப்பட்டேன். நான் கும்பலால் அச்சுறுத்தப்பட்டு வண்ணப்பொடி வீசப்பட்டபோது என்னுடன் என் நண்பர்கள் 35 பேர் இருந்தனர். எனது ஜப்பானிய நண்பரால் அந்த வீடியோ எதிர்பாராத விதமாக எடுக்கப்பட்டுவிட்டது. ஹோலி பண்டிகை குறித்து எதிர்மறை எண்ணத்தை வெளிப்படுத்துவது நோக்கமல்ல.

இந்தியாவின் கொண்டாட்டம் மற்றும் நேர்மறை எண்ணத்தை வெளிப்படுத்துவது என் நோக்கமாக இருந்தபோதும் பல்வேறு வழிகளில் கவலையை ஏற்படுத்தியதற்கு நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா அற்புதமான நாடு... அதை நான் விரும்புகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றபோது இந்தியாவை நீங்கள் வெறுக்க முடியாது' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story